பணிக்கு உரிய நேரத்தில் வராத மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு
பணிக்கு உரிய நேரத்தில் வராத மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (27.08.2023) திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சரியான நேரத்தில் பணியில் இல்லாத மருத்துவர், மருந்தாளுநர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மேலும் மருத்துவமனை ஆய்வின் போது அங்கு நிறுத்தப்பட்டுள்ள நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் மருந்து பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு சரிவர பாதுகாப்பின்றி இருந்ததை பார்த்த அமைச்சர் அவர்கள். அங்குள்ள செவிலியரிடம் விசாரித்த போது அந்த வாகனத்தின் ஓட்டுனர் பணிக்கு வராததையும் அந்த வாகனத்தில் இருந்த மருந்துகள் பாதுகாப்பின்றி இருப்பதை கண்ட அமைச்சர் அவர்கள், அலட்சியத்தன்மையுடன் பணியாற்றியதை அறிந்து, அந்த ஓட்டுநர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் அவர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நாய்க்கடி மற்றும் பாம்புகடி மருந்துகள் கையிருப்பு உள்ளதை பொதுமக்கள் தேவைக்கேற்ப அறிந்து பயன்படுத்தும் வகையில் அதற்குரிய மருந்து இருப்பு அறிவிப்பு பலகைகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வைக்குமாறு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துறை இயக்குனர் அவர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்கள் அறியும் வகையில் பாம்புகடி மற்றும் நாய்கடி மருந்துகள் இருப்பு உள்ளதை அறிவிப்பு பலகையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.