தா.பழூர் ஊராட்சி துணை தலைவரின் கையெழுத்து அதிகாரம் பறிப்பு


தா.பழூர் ஊராட்சி துணை தலைவரின் கையெழுத்து அதிகாரத்தை பறித்ததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர்

தா.பழூர் ஊராட்சி

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி மன்ற துணை தலைவராக இருந்தவர் மாலதி. இவர் ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறி அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவரது ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவியை ரத்து செய்துவிட்டு அவருக்கு மாற்றாக வேறு ஒரு வார்டு உறுப்பினருக்கு நிர்வாக கையெழுத்திடும் அதிகாரத்தை வழங்கி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த தகவலை அறிந்த ஊராட்சி மன்ற துணை தலைவரின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சிலர் போலியாக ஆவணங்களை தயார் செய்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கு மாலதி ஒத்துழைப்பு தராததால் அவரை ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவியில் இருந்து அகற்ற சிலர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

பேச்சுவார்த்தை

முறையான விசாரணை செய்யப்படாத நிலையில் மற்றொரு ஊராட்சி மன்ற உறுப்பினருக்கு கையெழுத்து அதிகாரத்தை மாற்றி கொடுத்தது தவறு என்று கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) விஸ்வநாதன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது தா.பழூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் முறைகேடுகளை பற்றி விசாரிக்காமல் தவறான முடிவெடுத்து அதனை மாவட்ட கலெக்டருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பரிந்துரை செய்து விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து ஜெயங்கொண்டம்- கும்பகோணம் சாலையில் பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் துரை, தா.பழூர் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் ஜெகன்நாத், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் அதிகாரிகளோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

கையெழுத்து அதிகாரம் ரத்து

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதனிடம் தா.பழூர் ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவருக்கும், துணை தலைவருக்கும் இடையே பிரச்சினை இருப்பதால் இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார்களை அளித்துள்ளனர்.

ஆனால் தா.பழூர் மட்டும் அவசர கதியில் துணை தலைவரின் கையெழுத்து அதிகாரத்தை ரத்து செய்துவிட்டு மற்றொரு நபருக்கு வழங்கியது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பதில் சொல்லாததால் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து, தாசில்தார் துரை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஊராட்சி மன்ற துணை தலைவர் மாலதி மற்றும் அவரது ஆதரவாளர்களை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக மனு அளிக்குமாறும், தங்களது நிலைப்பாடு குறித்து அவரிடம் விளக்கமாக தெரிவிக்கவும் ஆலோசனை வழங்கினார்.

இதனைதொடர்ந்து ஊராட்சி மன்ற துணை தலைவர் மாலதி தரப்பினர் இன்று (வெள்ளிக்கிழமை) அரியலூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து புகார் மனு வழங்க உள்ளனர்.


Next Story