திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை


திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
x

திருத்தணி தேசிய நேடுஞ்சாலையில் விபத்துக்கள் அதிகம் நடைபெறுகிறது. அவற்றை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி சப்-டிவிஷனில் தான் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருத்தணி சப்-டிவிஷனில் சாலை விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு திருத்தணி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து நேற்று திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) சிபின், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஞான தீ ஆகியோர் திருத்தணி, கனகம்மாசத்திரம் ஆகிய 2 போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன்பாடி, முருக்கம்பட்டு, தரணிவராகபுரம், மேதினிபுரம், ஆற்காடுகுப்பம் கூட்டுச்சாலை, ஆற்காடுகுப்பம் உயர் மட்ட மேம்பாலம், புதூர் கூட்டுச்சாலை, ராமஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் நேரில் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் கூறும்போது:- திருத்தணி சப்-டிவிஷனில் சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருத்தணி சப்-டிவிஷனில் நடைபெறும் சாலை விபத்துகளில் 85 சதவீதம் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி, கனகம்மாசத்திரம் போலீஸ் நிலைய எல்லைக்குள் நடைபெறுகிறது. விபத்துக்கள் அதிகம் நடைபெறும் இடங்களாக கண்டறியப்பட்ட பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைத்தல், இரவில் ஒளிரும் வில்லைகள் ஒட்டுதல், விபத்து பகுதி என அடையாளம் குறிக்கும் வகையில் பலகைகள், போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.


Next Story