குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் அனுமதியின்றி இயங்கிய 10 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில்  அனுமதியின்றி இயங்கிய 10 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றம்  மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை
x

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் அனுமதியின்றி இயங்கிய 10 சாயப்பட்டறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

நாமக்கல்

குமாரபாளையம்:

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் அனுமதியின்றி இயங்கிய 10 சாயப்பட்டறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

புகார்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதியானது ஜவுளி தொழிலுக்கு பெயர் பெற்றது. இந்த பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. மேலும் நூலுக்கு சாயமிடும் பட்டறைகளை விட, அதிக நச்சுகள் கொண்ட ரசாயன பொருட்கள் மூலம் நேரடியாக துணிக்கு சாயமிடும் பட்டறைகளை அதிகளவில் இயங்கி வருகின்றன. இதில் பெரும்பாலான சாயப்பட்டறைகள் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமலும், அரசின் அனுமதி பெறாமலும் இயங்கி வருவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மோகன், உதவி பொறியாளர்கள் கிருஷ்ணன், சந்தான கிருஷ்ணன், ஈரோடு பறக்கும் படை சுற்றுச்சூழல் பொறியாளர் மணிவண்ணன், உதவி பொறியாளர் வினோத், குமாரபாளையம் தாசில்தார் தலைமையில் மின்வாரிய அதிகாரிகள், போலீசார் குமாரபாளையம் பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளில் ஆய்வு செய்தனர்.

10 சாயப்பட்டறைகள்

இதில் குமாரபாளையத்தில் ஜே.கே.கே நடராஜா காலனி, ஹைஸ்கூல் ரோடு, ஓலப்பாளையம் ரோடு, சுந்தரம் காலனி ரோடு, ஆனங்கூர் ரோடு மற்றும் பள்ளிபாளையத்தில் வண்ணாம்பாறை ஆகிய பகுதிகளில் 10 சாயப்பட்டறைகள் உரிய அனுமதியின்றி இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் 10 சாயப்பட்டறைகளையும் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இந்த சம்பவத்தால் அந்தந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story