எட்டயபுரத்தில் தேவர் படம் அவமதிப்பு :பொதுமக்கள் சாலை மறியல்


எட்டயபுரத்தில் தேவர் படம் அவமதிப்பு :பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 July 2023 12:15 AM IST (Updated: 12 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரத்தில் தேவர் படம் அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் மேலவாசலில் தூத்துக்குடி- கோவில்பட்டி செல்லும் சாலையில் தேவர் படம் உள்ளது. இப்பகுதியில் நேற்று மாலையில் வந்த 3 மர்ம நபர்கள் குடிபோதையில் தேவரின் உருவப்படத்தை அவமதிப்பு செய்து விட்டு ஓடிவிட்டனர். இதை தொடர்ந்து இப்பகுதி மக்கள் தூத்துக்குடி- கோவில்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தேவர்படத்தை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் தேவர் படத்தை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் அந்த 3 மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

சாலை மறியல்போராட்டம் இரவு 9 மணி வரை நீடித்தது. அங்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வந்தார். அவர் போராட்ட குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சம்மந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை தொடர்ந்து சுமார் 3 மணி நேர போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் அப்பகுதியில் போக்குவரத்தும் சீரானது.


Next Story