ரூ.48¼ லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள்
கொள்ளிடம் பகுதியில் ரூ.48 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் பகுதியில் ரூ.48 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
கொள்ளிடம் அருகே உள்ள மகேந்திரப்பள்ளி, புளியந்துறை ஆகிய பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆச்சாள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியினை பார்வையிட்டு 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு வாசிப்பு பழக்கத்தை உருவாக்கி, தினசரி பாடங்களை அன்றைக்கே நிறைவு செய்யும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும். அப்போது தான் மாணவர்களின் கற்றல் திறன் வளர்ந்து, தேர்ச்சி சதவீதம் உயரும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார். பின்னர், மகேந்திரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தை நேயபள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு, பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தார்.
சமையல் கூடம் கட்டும் பணி
அதனை தொடர்ந்து, புளியந்துறை கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.8 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் சமையல் கூடம் மற்றும் ரூ.12 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் அண்ணாகுளம் மேம்பாட்டு பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், மகேந்திரப்பள்ளி மற்றும் புளியந்துறை கிராமங்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை கள ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கொள்ளிடம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளின் தற்போதைய நிலை மற்றும் முடிவுற்ற பணிகளின் நிலை ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், அருள்மொழி, ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி சிவபாலன் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் உடன் இருந்தனர்.