சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை கிரீடம் மீது அமர்ந்த பச்சைக்கிளியால் பக்தர்கள் பரவசம்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை கிரீடம் மீது பச்சைக்கிளி அமர்ந்திருந்ததை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
கோட்டை மாரியம்மன் கோவில்
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. மாநகரின் காவல் தெய்வமாக கோட்டை மாரியம்மனை பக்தர்கள் வணங்கி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த மாதம் ஆடித்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கோட்டை மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பணியில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிரீடம் மீது அமர்ந்த பச்சைக்கிளி
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பச்சைக்கிளி ஒன்று பறந்து வந்து அம்மன் சிலை கிரீடத்தின் மீது அமர்ந்தது. பின்னர் அந்த கிளி அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து அங்கேயே இருந்து வருகிறது. அம்மனுக்கு பூசாரிகள் அபிஷேகம் மற்றும் பூஜை செய்தாலும் அதற்கு கிளி எந்த ஒரு இடையூறும் செய்யாமல் அப்படியே அமர்ந்துள்ளது.
மேலும் பூஜைக்கு வைக்கப்படும் பழம்உள்ளிட்ட பிரசாதத்தை எடுத்து கிளி சாப்பிடுகிறது. அம்மன் சிலை மீது கிளி அமர்ந்திருப்பது குறித்த தகவல் அறிந்ததும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் அம்மனையும், கிளியையும் பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர். சிலர் தங்களது செல்போனில் அதனை புகைப்படம் எடுத்து கொண்டனர்.
விரட்டியும் போகவில்லை
இதுகுறித்து கோவில் தலைமை பூசாரி சிவக்குமார் கூறுகையில், 'கோட்டை மாரியம்மன் கோவிலில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பூஜை நடைபெறும். வழக்கம்போல நேற்று முன்தினம் காலை பூஜை நடந்து கொண்டிருந்தது. அப்போது எங்கிருந்தோ ஒரு பச்சைக்கிளி திடீரென பறந்து வந்து அம்மன் சிலை கிரீடம் மீது அமர்ந்தது.
நாங்கள் அதனை விரட்டியும் போகாமல் அங்கேயே இருக்கிறது. கோட்டை மாரியம்மன் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் அம்மனே கிளி ரூபத்தில் இங்கு வந்திருப்பதாக பக்தர்கள் கருதுகிறார்கள். ஏராளமான பக்தர்கள் இந்த விஷயத்தை அறிந்து கோவிலுக்கு வந்து அம்மனையும், கிளியையும் தரிசித்து செல்கிறார்கள்' என்றார்.
அப்போது கோட்டை மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.