பறவை காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
பொள்ளாச்சியில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி பறவை காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி பறவை காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
தேர்த்திருவிழா
பொள்ளாச்சி கடைவீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் தேர்த்திருவிழா கடந்த மாதம் 14-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. 21-ந் தேதி கம்பம் நடப்பட்டது. இந்த கம்பத்தில் திருவிழா முடியும் வரை பெண் பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபடுவது வழக்கம் என்பதால் தினமும் ஏராளமான பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டு வருகிறார்கள். 31-ந் தேதி கோவில் பூவோடு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் பக்தர்கள் பூவோடு எடுத்து நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வான பக்தர்கள் அலகு குத்தி பறவை காவடியில் ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விரதம் இருந்த பக்தர்கள் முதுகு, கை, கால் உள்ளிட்ட இடங்களில் அலகு குத்தினர். மேலும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பறவைக்காவடி எடுத்து 25-க்கும் மேற்பட்டோர் உடலில் பல இடங்களில் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
சிறப்பு அலங்காரம்
மேலும் சில பக்தர்கள் தங்களது கன்னத்தில் நீளமான அளவிற்கு அலகையும் குத்தி வந்தனர். இந்த செயல் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்ததும் பறவைக்காவடி புறப்பட்டது. ஊர்வலமானது மார்க்கெட் ரோடு, விநாயகர் கோவில், வெங்கட்ரமணன் வீதி, மத்திய பஸ் நிலையம், ரவுண்டானா, காந்தி சிலை, கோவை ரோடு, தேர் நிலையம், சத்திரம் வீதி, தெப்பக்குளம் வீதி வழியாக கோவிலை வந்து அடைந்தது. முன்னதாக பறவைக்காவடி முன்பு மேள-தாளம் முழங்க பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கையில் பூவோடு எடுத்து சென்றனர். மேலும் பக்தர்கள் பலர் தங்கள் உடலில் சாட்டை அடித்தவாறு சென்றனர். விழாவில் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
தேரோட்டம்
விழாவை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று(திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு ஆயக்கால் போடும் நிகழ்ச்சியும், நாளை(செவ்வாய்க்கிழமை) மகுடம் வைத்தல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள்(புதன்கிழமை) இரவு 7 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் மாரியம்மன் வெள்ளியினால் தயார் செய்யப்பட்ட தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் அளிக்க உள்ளார்.