கோவிலுக்கு முளைப்பாரிகளுடன் சீர்வரிசை கொண்டு வந்த பக்தர்கள்


கோவிலுக்கு முளைப்பாரிகளுடன் சீர்வரிசை கொண்டு வந்த பக்தர்கள்
x

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கு முளைப்பாரிகளுடன் சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் கொண்டு வந்தனர்.

கரூர்

ஆடி தெய்வ திருமண விழா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா அபிஷேக குழு சார்பில் 25-ம் ஆண்டு ஆடி தெய்வ திருமண விழா நடைபெறுகிறது. இதனையொட்டி கடந்த 29-ந்தேதி கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கொடிமர விநாயகருக்கு கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. பின்னர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், 1,250 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட தேவார இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று காலை 1,008 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலை 4 மணியளவில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்திற்கு 108 அடி உயர மாலை சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சீர்வரிசை

தொடர்ந்து கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் இருந்து பெண்வீட்டு சீர் அழைக்க அனைவரும் ஒன்றுகூடி மேட்டுத்தெரு அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவிலுக்கு சென்று மீண்டும் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கு வந்தடைந்தனர். அப்போது 1,008 முளைப்பாரியுடன் சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. மாலை 6 மணியளவில் கோவில் வளாகத்தில் 1,008 கலைஞர்கள் கலந்து கொண்ட பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7 மணியளவில் மாப்பிள்ளை பெண் வீடு புகுதல், சீர்தட்டு அழைப்பிதழ், சிறப்பு உபசரணைகள் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது.

திருவீதி உலா

இதனைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.45 மணி முதல் 11.45 மணிக்குள் கோவில் நால்வர் அரங்கில் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமிக்கும், அலங்காரவள்ளி, சவுந்திரநாயகி அம்பாளுக்கும் தெய்வ திருமண விழா நடைபெற உள்ளது.

பின்னர் தமிழிசை பாடல்களும், 1,008 கலைஞர்கள் கலந்து கொள்ளும் ஒயிலாட்டமும், கும்மியாட்டமும், கோலாட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணியளவில் பல்வேறு இசை வாத்தியங்கள் முழங்க சுவாமி-அம்பாள் திருக்கல்யாண கோலத்தில் திருவீதி உலாவும், வாணவேடிக்கையும் நடைபெற உள்ளது.


Next Story