பழனி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து ஆடி வந்த பக்தர்கள்
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து ஆடியபடி பக்தர்கள் வந்தனர். கூட்டம் அலைமோதியதால், சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று திருக்கல்யாணம்
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
திருவிழாவையொட்டி தினமும் சுவாமிக்கு பல்வேறு அலங்காரங்கள், அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. விழாவில் இன்று (திங்கட்கிழமை) முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
காத்திருந்து சாமி தரிசனம்
பழனி முருகன் கோவிலை பொறுத்தவரை, வார விடுமுறை நாளில் வழக்கத்தை விட இருமடங்கு பக்தர்கள் வருகை தருவர். அதன்படி நேற்று வார விடுமுறை என்பதாலும், பங்குனி உத்திர திருவிழாவையொட்டியும் பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் படையெடுத்தனர்.
குறிப்பாக திருஆவினன்குடி கோவில், பாதவிநாயகர் கோவில், மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவில் தரிசன வழிகள், அன்னதான கூடம் ஆகியவற்றில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
இதேபோல் மலைக்கோவிலுக்கு செல்லும் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக மின்இழுவை ரெயிலில் பயணம் செய்ய கவுண்ட்டரையும் கடந்து கிரிவீதியில் பக்தர்கள் காத்திருந்ததை காண முடிந்தது. கூட்டம் காரணமாக சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
காவடி எடுத்து ஆடிய பக்தர்கள்
பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பெரும்பாலான பக்தர்கள் தீர்த்தக்காவடி, மயில்காவடி எடுத்து வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். மேலும் கோவிலில் முடிகாணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
குறிப்பாக அனைவரையும் கவரும் வகையில் திருப்பூரை சேர்ந்த பக்தர்கள், மயில் காவடி எடுத்து ஆடியபடி கிரி வீதியில் வலம் வந்து கோவிலை வந்து அடைந்து சாமி தரிசனம் செய்தனர்.