திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான கார்த்திகேயன் குடில்களை புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை


திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான கார்த்திகேயன் குடில்களை புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை
x

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான கார்த்திகேயன் குடில்களை புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வருகை தரும் வெளியூர் பக்தர்கள் குறைந்த வாடகையில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் தணிகை, கார்த்திகேயன் மற்றும் சரவணப்பொய்கை இல்லங்களில் குடில்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு திருத்தணி முருகன் கோவில் மற்றும் பக்தர்கள் தங்கும் குடில்களில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பக்தர்கள் தங்கும் குடில்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என தெரியவந்தது. இதனையடுத்து பக்தர்கள் தங்கும் குடில்களை விரைந்து சீரமைக்குமாறு கோவில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார். இதையடுத்து கோவில் நிர்வாகம், தணிகை இல்லத்தில் பழுதடைந்த 39 குடில்களை ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து கடந்த மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

அதேபோல் அரக்கோணம் சாலையில் முருகன் கோவிலுக்கு சொந்தமான கார்த்திகேயன் குடில்களில் 52 தங்கும் அறைகள் உள்ளன. 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் இதன் மேற்கூரை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இங்கு உள்ள அறைகளில் குடிநீர் வசதி, மின்விசிறி, குளிர்சாதன வசதி, கட்டில், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர இல்லாததால் முக்கிய விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் வெளியூர் பக்தர்கள் முருகன் கோவிலுக்கு சொந்தமான கார்த்திகேயன் குடில்களில் தங்காமல் அருகில் உள்ள தனியார் விடுதிகளில் அதிக பணம் கொடுத்து தங்குகின்றனர்.

எனவே இந்து அறநிலையத்துறை ஆணையர் மற்றும் முருகன் கோவில் நிர்வாகம் கார்த்திகேயன் குடில்கள் பராமரிப்பு பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story