மகாளய அமாவாசையையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த பக்தர்கள்


மகாளய அமாவாசையையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 15 Oct 2023 12:15 AM IST (Updated: 15 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மகாளய அமாவாசையையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த பக்தர்கள் பலிகர்ம பூஜை செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

கன்னியாகுமரி

இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டு புரட்டாசி மாத மகாளய அமாவாசையான நேற்று இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அங்கு முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

பின்னர் கடற்கரையில் அமர்ந்திருந்த புரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்தனர். தொடர்ந்து பூஜை செய்த பொருட்களை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்து சென்று கடலில் போட்டபடி மீண்டும் நீராடிய அவர்கள் தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்தனர்.

இதனால் கடற்கரையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமாக இருந்தது.

மகாளய அமாவாசையையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு வழிபாடு, விசேஷ பூஜை, உஷ பூஜை, உஷ தீபாராதனை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை நடந்தது. மேலும் வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் பகவதி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மாலையில் சாயரட்சை தீபாராதனையும், இரவு 8.30 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வர செய்யும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

1 More update

Next Story