பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
வார விடுமுறையையொட்டி, பழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
பழனி முருகன் கோவில்
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்யவும், முடிக்காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செய்யவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். விடுமுறை, விசேஷ நாட்களில் வழக்கத்தை விட வெளியூர், வெளிமாநில பக்தர்கள் வருகை அதிகமாக காணப்படும்.
அந்தவகையில் நேற்று வாரவிடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கான பிரதான வழிகளான படிப்பாதை, யானைப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதேபோல் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் கவுண்ட்டரையும் தாண்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மலைக்கோவில் வெளிப்பிரகாரம், பொது, கட்டண தரிசன வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் இருந்தது. இதனால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
காவடி எடுத்த பக்தர்கள்
பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது பங்குனி உத்திரம் ஆகும். இந்த திருவிழாவையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து காவடியாக சுமந்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.
அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி நேற்று திருப்பூர், மடத்துக்குளம் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர்.
மலைக்கோவிலுக்கு சென்று அபிஷேகம் செய்து வழிபட்ட பின் காவடிக்குழுவை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என பலர் கோவில் வெளிப்பிரகாரத்தில் நின்று பாரம்பரிய நடனமான கும்மி அடித்து ஆடினர். இதை கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து தங்கள் செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.