நவதிருப்பதி கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்
நவதிருப்பதி கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தென்திருப்பேரை:
புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகும். இந்த தினத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தென்திருப்பேரை சுற்றுவட்டார பகுதியை சுற்றி நவத்திருப்பதி கோவில்கள் அமைந்துள்ளது. இந்த கோவில்கள் 108 வைணவ திவ்ய தேசங்களிலும் ஒன்றாகும். அதன்படி ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசன பெருமாள், திருப்புளியங்குடி காய்சினி வேந்த பெருமாள், இரட்டை திருப்பதி தேவர்பிரான், அரவிந்த லோசனர், பெருங்குளம் மாயகூத்தப்பெருமாள், தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் ஆகிய நவத்திருப்பதி கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையான நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
இதைமுன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5.30 மணிக்கு திருமஞ்சனம், 6 மணிக்கு நித்திய தீபாராதனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல்வேறு வாகனங்களில் வரும் பக்தர்கள் குடும்பத்துடன் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
மேலும் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் அன்னதான குழு சார்பாக பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக நெல்லையில் இருந்து நவதிருப்பதி கோவில்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.