ஆட்டின் குரல் வளையை கடித்து அம்மனுக்கு பலி கொடுத்த பக்தர்கள்


ஆட்டின் குரல் வளையை கடித்து அம்மனுக்கு பலி கொடுத்த பக்தர்கள்
x
தினத்தந்தி 10 Feb 2023 7:30 PM GMT (Updated: 2023-02-11T01:00:24+05:30)
சேலம்

எடப்பாடி:-

எடப்பாடி அருகே உள்ள குப்பனூரில் பிரசித்தி பெற்ற சக்தி காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கொடியேற்றம், சக்தி கரகம், பூங்கரக ஊர்வலம், தீர்த்த குட ஊர்வலம், அம்மன் திருவிதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து புலி, கரடி, காட்டெருமை, குதிரை மற்றும் பல்வேறு கடவுள்களின் வேடம் அணிந்து வந்த பக்தர்கள் கோவிலை சுற்றி வலம் வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். புலி வேடம் அணிந்து வந்த திரளான பக்தர்கள், கோவில் வளாகத்தின் அருகே ஆட்டின் குரல் வளையை கடித்து, அம்மனுக்கு பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து காவிரி ஆற்றங்கரையிலிருந்து அலங்கரிக்கப்பட்ட கரகத்துடன் ஊர்வலமாக பக்தர்கள் வந்தனர். பின்னர் பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள், கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். விழாவில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story