திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு


திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
x

ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

புதுக்கோட்டை

ஆவணி மாதம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் மாதங்களில் ஆவணி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். அன்றைய தினம் பக்தர்கள் விரதம் இருந்து அசைவ உணவை தவிர்த்து சைவ உணவு சமைத்து சாப்பிடுவது வழக்கம். மேலும் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அதனால் ஆவணி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமையும் விசேஷமாகும்.

அந்த வகையில் ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர். கோவிலில் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கூட்டநெரிசலை தவிர்க்க வரிசையாக செல்லும் வகையில் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜைகள்

கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. மேலும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். கோவிலில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற அகல்விளக்கேற்றி வழிபட்டனர். விளக்கேற்றும் இடத்தில் பக்தர்கள் வசதிக்காக மேற்கூரை போடப்பட்டிருந்தது.

பக்தர்கள் வருகையையொட்டி காய்கறிகள் வியாபாரத்திற்காக திடீர் கடைகளையும் வியாபாரிகள் போட்டிருந்தனர். அம்மனை தரிசனம் செய்த பின் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை கடைகளில் பக்தர்கள் வாங்கி சென்றனர். தொடர்ந்து இந்த ஆவணி மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story