பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பவுர்ணமி உள்ளிட்ட விழா நாட்களில் மட்டுமே பக்தர்கள் வருகை அதிகமாக இருந்த நிலை மாறி, அனைத்து நாட்களிலும் பக்தர்கள் அதிகளவில் வந்த வண்ணம் இருக்கின்றனர்.
குறிப்பாக, அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.
இந்த நிலையில் வார விடுமுறை நாட்கள், ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
அதன்படி நேற்று கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகையையொட்டி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சில பக்தர்கள் மாலை மற்றும் இரவில் கிரிவலம் சென்றனர்.






