மருதமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
தொடர் விடுமுறையைெயாட்டி மருதமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
வடவள்ளி
தொடர் விடுமுறையைெயாட்டி மருதமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மருதமலை
முருகப்பெருமானின் 7-வது படைவீடாக கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவில் பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் திரளானோர் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில் காந்தி ெஜயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை வந்துள்ளது. இதையொட்டி மருதமலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
நீண்ட வரிசை
நேற்று காந்தி ஜெயந்தி மட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்ததால், அடிவாரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தவிர அடிவாரத்தில் இருந்து மலைக்கு வாகனங்களில் வராத பக்தர்களை ஏற்றி செல்ல வழக்கம்போல் மினி பஸ் இயக்கப்பட்டது. அதிலும் பயணிக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை காண முடிந்தது. பின்னர் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் அங்கும் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்து சென்றனர்.
கூடுதல் பஸ்கள்
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-
தொடர் விடுமுறை நாட்களில் மருதமலை முருகன் கோவிலில் கூட்டம் அதிகமாக உள்ளது. அப்போது சாமி தரிசனம் செய்ய காலதாமதம் ஆகிறது. இதுபோன்ற நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் மினி பஸ்களை இயக்க கோவில் நிர்வாகம் முன்வர வேண்டும். வழக்கமாக தினமும் 3 பஸ்கள் இயக்கப்படுவதை 5 பஸ்களாக அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், அரசு விடுமுறை மற்றும் சிறப்பு நாட்களில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.