நீர்வரத்து குறைந்துள்ளதால் பக்தர்கள் தீர்த்தம் எடுக்க சின்னாறுக்கு செல்லும் நிலை


நீர்வரத்து குறைந்துள்ளதால் பக்தர்கள் தீர்த்தம் எடுக்க சின்னாறுக்கு செல்லும் நிலை
x

பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து குறைந்துள்ளதால் பக்தர்கள் தீர்த்தம் எடுக்க சின்னாறுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்

பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து குறைந்துள்ளதால் பக்தர்கள் தீர்த்தம் எடுக்க சின்னாறுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தீர்த்தம் எடுத்தல்

கோடை காலம் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது கிராமப்புற திருவிழாக்கள்தான். நோன்பு சாட்டுதலுடன் தொடங்கி காப்புகட்டி விரதம் இருந்து தீர்த்தம் எடுத்தல், மாவிளக்கு, பூவோடு, தீ மிதித்தல், அழகு குத்துதல் என அடுத்தடுத்த கட்டத்திற்கு விறுவிறுப்புடன் விழா அனுதினமும் நகரும். அத்துடன் உற்றார் உறவினர்களை அழைத்து விருந்து வைத்து கோலாகலமாக விழாவை கொண்டாடுவர் பொதுமக்கள்.

இதேபோன்று தான் கோவில்களில் நடைபெறுகின்ற கும்பாபிஷேக நிகழ்வுகளும். பண்டிகை, கும்பாபிஷேகம் இரண்டிற்கான முதல் நிகழ்ச்சியே தீர்த்தம் எடுப்பதில்தான் தொடங்குகிறது. இதற்காக பொதுமக்கள் ஒன்றிணைந்து புண்ணிய தளங்களுக்கு சென்று மேள தாளங்கள் முழங்க பக்தி பரவசத்துடன் குடங்களில் தீர்த்தம் எடுத்து வருவார்கள். அதைத் தொடர்ந்து கடவுள்களுக்கு தீர்த்த அபிஷேகம் செய்து விழாவையும் விறுவிறுப்பு அடையச் செய்வார்கள்.

நீர்வரத்து குறைந்தது

அந்த வகையில் உடுமலையின் சுற்றுப்புற கிராமங்களில் கோவில் விழாக்களும், கும்பாபிஷேகமும் பரவலாக நடைபெற்று வருகிறது. இதற்காக கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முதல் நிகழ்ச்சியாக திருமூர்த்திமலைக்கு தீர்த்தம் எடுக்கச் செல்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கோடை காலம் முடிவடைந்தும் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை. மாறாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து கடும் வறட்சி நிலவி வருகிறது.

இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து குறைந்து விட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள், பொதுமக்கள் உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதி உள்ள சின்னாற்றுக்கு தீர்த்தம் எடுக்கச் செல்கின்றனர். அதன் பின்பு குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்து கட்டளை மாரியம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்து பின்பு ஊர்வலமாக கிராமங்களுக்கு எடுத்துச்செல்கின்றனர். ஆனால் கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு செல்வதற்கு ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் அனுமதிக்கப்பட்ட நாட்களில் மட்டுமே பக்தர்களால் தீர்த்தம் எடுக்க முடிகிறது.

கட்டுப்பாடுகள் கிடையாது

பயண நேரம் அதிகம், வனவிலங்குகள் நடமாட்டம் போன்றவற்றால் அச்சத்துடனே பக்தர்கள் சென்று வரவேண்டி உள்ளது. ஆனால் பஞ்சலிங்க அருவிக்கு செல்வதற்கு இது போன்று கட்டுப்பாடுகள் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் சென்று தீர்த்தம் எடுத்துக் கொண்டு வரலாம்.

இதனால் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து அருவியில் நீர்வரத்து ஏற்பட்டால் விழாக்கள் மேலும் சிறப்பு அடையும் என்றுபக்தர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story