ஊர்க்காவல் படையினருக்கு துப்பாக்கி வழங்க பரிசீலனை டி.ஜி.பி. பி.கே.ரவி பேச்சு
ஊர்க்காவல் படையினருக்கு துப்பாக்கி வழங்க பரிசீலனை செய்யப்படும் என்று திருச்சியில் நடந்த ஊர்க்காவல் படை வீரர்கள் பயிற்சி நிறைவு விழாவில் டி.ஜி.பி. பி.கே.ரவி பேசினார்.
ஊர்க்காவல் படையினருக்கு துப்பாக்கி வழங்க பரிசீலனை செய்யப்படும் என்று திருச்சியில் நடந்த ஊர்க்காவல் படை வீரர்கள் பயிற்சி நிறைவு விழாவில் டி.ஜி.பி. பி.கே.ரவி பேசினார்.
பயிற்சி நிறைவு விழா
திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு சமீபத்தில் புதிதாக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு 40 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த வீரர்களின் பயிற்சி நிறைவு விழா மற்றும் ஊர்க்காவல்படை தினவிழா நேற்று திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. விழாவுக்கு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமை தாங்கினார்.
விழாவில் குடிமை பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை டி.ஜி.பி. பி.கே. ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊர்க்காவல்படை உட்கோட்ட பொறுப்பாளர்களுக்கு செல்போன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
ஊர்க்காவல் படையினருக்கு துப்பாக்கி
ஊர்க்காவல் படைவீரர்களாகிய நீங்கள் போலீசாரின் ஒரு அங்கம். உங்களுக்கு போலீசாருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் திறமையாக பணியாற்ற வேண்டும். நீங்கள் 37 நாட்களில் நன்றாக பயிற்சி முடித்து, அணிவகுப்பு நடத்தி காண்பித்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பீகாரில் ஊர்க்காவல்படைவீரர்கள் நிரந்தரமாக உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் துப்பாக்கிகளும் வழங்கப்பட்டுள்ளன. நீங்கள் போலீசாருக்கு முதுகெலும்பாக உள்ளீர்கள். உங்களுக்கும் (தமிழக ஊர்க்காவல் படைவீரர்கள்) ஆயுதங்கள் வழங்க பரிசீலனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலைநிகழ்ச்சிகள்
இதைத்தொடர்ந்து ஊர்க்காவல் படை வீரர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் ஊர்க்காவல் படை உதவி சரக தளபதி சிவக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.முகமது ரபி மற்றும் ஆயுதப்படை, ஊர்காவல்படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஊர்க்காவல் படையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமண உதவித்தொகையாக ரூ.1 லட்சம், புதிதாக சேர்ந்த வீரர்களுக்கு வங்கி கணக்கு தொடங்க நிதி உதவி வழங்கப்பட்டது. முன்னதாக ஊர்க்காவல்படை வட்டார தளபதி ஏ.எல்.சிராஜுதீன் வரவேற்று பேசினார். முடிவில் துணை வட்டார தளபதி முத்துமாலா தேவி நன்றி கூறினார்.