கடைகளுக்கு வந்திறங்கிய பொருட்களை திருடிய வாலிபருக்கு தர்ம அடி


கடைகளுக்கு வந்திறங்கிய பொருட்களை திருடிய வாலிபருக்கு தர்ம அடி
x

விழுப்புரம் மார்க்கெட் பகுதியில் கடைகளுக்கு வந்திறங்கிய பொருட்களை திருடிய வாலிபருக்கு தர்ம அடி

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் எம்.ஜி.சாலை பகுதியில் உள்ள கடைகள், வணிக வளாகங்களுக்கு சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இருந்து லாரிகள் மூலம் வரக்கூடிய பொருட்களை அதிகாலை வேளையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள், அந்தந்த கடைகளில் இறக்கி வைப்பது வழக்கம். அவ்வாறு இறக்கி வைக்கப்படும் பொருட்களில் மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் பலவற்றின் எண்ணிக்கை குறைவதாகவும், அந்த பொருட்கள் திருடு போவதாகவும் கூறி கடந்த 2 மாதங்களாக சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் பிரச்சினை செய்து வருகின்றனர். அதற்கு பொருட்கள் குறைவுக்கும், காணாமல் போவது பற்றியும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூறி வந்துள்ளனர்.

இந்நிலையில் அங்குள்ள சில கடைகளில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கடை உரிமையாளர்கள் பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், கடையில் இறக்கி வைக்கப்படும் பார்சல்களை பிரித்து அதிலிருந்த பொருட்களை திருடி செல்வதும், இவ்வாறாக அந்த நபர் பலமுறை பொருட்களை திருடிச்சென்றதும் பதிவாகியிருந்தது. உடனே அந்த வீடியோ பதிவுகளை கடை உரிமையாளர்கள் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிவு செய்ததோடு இதுபற்றி சுமை தூக்கும் தொழிலாளர்களிடமும் கூறினர். இதையடுத்து அந்த வாலிபரை கண்காணிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்ட நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை பொருட்களை திருட வந்த அந்த வாலிபரை கையும், களவுமாக மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விழுப்புரம் மார்க்கெட் வீதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story