தர்மபுரி அருகேசிப்காட் தொழில் பூங்கா அமைக்க முதற்கட்ட பணிகள் தொடக்கம்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.14.08 கோடி நிதி ஒதுக்கீடு


தர்மபுரி அருகேசிப்காட் தொழில் பூங்கா அமைக்க முதற்கட்ட பணிகள் தொடக்கம்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.14.08 கோடி நிதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 10 March 2023 7:00 PM GMT (Updated: 10 March 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி அருகே சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் முதல் கட்டப் பணிகள் தொடங்கியது. கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த ரூ.14.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிப்காட் தொழில் பூங்கா

தர்மபுரி தாலுகா அதகப்பாடி, நல்லம்பள்ளி தாலுகா தடங்கம், அதியமான்கோட்டை மற்றும் பாலஜங்கமனஅள்ளி ஆகிய கிராமங்களில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கியது. இதற்காக முதற்கட்ட நிலஎடுப்பு பணிகள் முடிக்கப்பட்டு மொத்தபரப்பு 1733.63 ஏக்கரில் இதுவரை சிப்காட் நிறுவனத்திடம் 478.38 ஏக்கர் பட்டா நிலமும், 984.34 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமும் மொத்தம் 1462.72 ஏக்கர் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.77.63 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிலம் ஒப்படைக்கப்பட்ட பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க நில ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கைகள் சிப்காட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிப்காட் தொழில் பூங்கா வளாகத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 1.35 கி.மீட்டர் தூரம் புதிய சாலை மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.14.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது. சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுசூழல் அனுமதி பெற இட்காட் நிறுவனத்தின் மூலம் முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாலை அமைக்கும் பணி

இந்த நிலையில் தடங்கம் கிராமத்தில் சிப்காட் தொழில் பூங்கா வளாகத்துக்கு செல்லும் 100 அடி புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். செந்தில்குமார் எம்.பி., எம்.எல்.ஏக்கள் கே.பி.அன்பழகன், ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், கோவிந்தசாமி, சம்பத்குமார், தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்து சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டனர்.

பின்னர் கலெக்டர் சாந்தி கூறுகையில், தர்மபுரி அருகே சிப்காட் தொழில் பூங்காவில் தொழிற்சாலைகளை அமைக்க பல முன்னணி நிறுவனங்கள் பார்வையிட்டு தேவையான நிலங்களை ஒதுக்க சிப்காட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் தர்மபுரி சிப்காட் தொழிற்பூங்காவில் ஓலோ எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தொழிற்சாலை அமைக்க 700 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டுள்ளது. இதற்கான நிலம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, துணைத் தலைவர் பெரியண்ணன், மாவட்ட கவுன்சிலர் மாது சண்முகம், சிப்காட் திட்ட அலுவலர் பன்னீர்செல்வம், ஒன்றிய கவுன்சிலர்கள் முருகன், சோனியா வெங்கடேசன், ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா, கூட்டுறவு சங்கத் தலைவர் சிவப்பிரகாசம், தாசில்தார்கள் வெங்கடேஸ்வரன், ஆறுமுகம் மற்றும் கலர் கலந்து கொண்டனர்.


Next Story