தர்மபுரி அருகேகாரில் கடத்திய 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
தர்மபுரி அருகே காரில் கடத்திய 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனை
தர்மபுரி டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் மற்றும் போலீசார் தர்மபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு ஓட்டல் அருகே சாலையோரத்தில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை நோக்கி சென்றனர். இதைப் பார்த்து அந்த காரில் இருந்த ஒருவர் அங்கிருந்து ஓடிவிட்டார். அந்தக் காரை பரிசோதனை செய்தபோது அதில் மொத்தம் 200 கிலோ எடை கொண்ட பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணை
இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும். பதிவு எண் இல்லாமல் இருந்த அந்த காரில் இந்த பொருட்களை கடத்திச் சென்றது அப்போது தெரியவந்தது. புகையிலை பொருட்கள் மற்றும் அந்தக் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த புகையிலை பொருட்கள் யாரால் எந்தப் பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டது? என்பது குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.