பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்: மாநில அளவில் 2-வது இடம் பிடித்து தர்மபுரி மாணவி சாதனை
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்:மாநில அளவில் 2-வது இடம் பிடித்து தர்மபுரி மாணவி சாதனை
மொரப்பூர்
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஹரிணிகா 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மாநில அளவில் 2-ம் இடம்
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் அதிக கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்றவர்களின் விவரங்களை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நேற்று வெளியிட்டது. இதன்படி தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள ஜடையம்பட்டி கிராமத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி ஹரிணிகா 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-வது இடம் பிடித்துள்ளார்.
இந்த மாணவி பிளஸ்-2 தேர்வில் 597 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி ஹரிணிகாவின் தந்தை மோகன் விவசாயம் செய்து வருகிறார். தாயார் திலகம். ஹரிணிகாவிற்கு மோனிஷ் என்ற அண்ணன் உள்ளார். இவர் சிவில் என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு இப்போது யு.பி.எஸ்.சி. தேர்விற்கு படித்து வருகிறார். மாணவிக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
மகிழ்ச்சி அளிக்கிறது
இது தொடர்பாக மாணவி ஹரிணிகா கூறியதாவது:-
பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலில் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் மாநில அளவில் 2-வது இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. மாநில அளவில் 2-ம் இடம் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக நான் நன்றாக படித்தேன். கணினி என்ஜினீயரிங் படிப்பை படித்து சாப்ட்வேர் என்ஜினீயர் ஆகி அந்த துறையில் சாதிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.