அதிக சம்பளத்தில் பணி வழங்குவதாக கூறி 50 பெண்களிடம் பணம் வசூலித்து தனியார் நிறுவனம் மோசடி-தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை
அதிக சம்பளத்தில் பணி வழங்குவதாக கூறி 50 பெண்களிடம் பணம் வசூலித்து தனியார் நிறுவனம் மோசடி புகார் தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி பகுதியில் பெண்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் தனியார் நிறுவனத்தில் பணி வழங்குவதாக சிலர் வலைதளங்களில் தகவல் தெரிவித்தனர். இதை நம்பி அங்கு பணி வாய்ப்பு கேட்டு சென்றோம். எங்களிடம் நுழைவு கட்டணம், நேர்முகத் தேர்வு கட்டணம் என்று ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்தனர். அழகு சாதன பொருட்கள் மற்றும் சத்துமாவு ஆகியவற்றை கொடுத்தனர். அதன் பின்பு சில மாதங்கள் ஆனபிறகும் முறையாக பணி வழங்கவில்லை. சம்பளமும் கொடுக்கவில்லை. இது பற்றி கேட்டபோது மிரட்டல் விடுகிறார்கள். அதிக சம்பளத்தில் பணி வழங்குவதாக கூறி 50 பேரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.