நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் தர்ணா


நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் தர்ணா
x

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 37 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் மற்றும் சாக்கடை கலப்பதை கண்டித்து விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் போராட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து நெல்லை மாநகராட்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். ஆற்றில் குப்பைகள், இறைச்சி, மீன் கழிவுகளை கொட்டாதவாறு கண்காணிக்க பொதுப்பணி துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், காவல் துறையினர் பணியாளர்களை நியமிக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தில் பேஸ்-1ல் வீட்டு கழிவுகள் 40 சதவீதம் திறந்தவெளி வாய்க்காலில் விடப்படுகிறது. அதை கண்காணித்து பாதாள சாக்கடை கால்வாய்க்குள் உடனே திருப்ப வேண்டும். ஆற்றுக்குள் கழிவு, குப்பை கொட்டுவோர், இயற்கை உபாதை கழிப்போரை, வாகனம் கழுவுவோரை தண்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது.

இந்தப் போராட்டத்தில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு, தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், இந்து மகா சபா நிர்வாகி கணேசன், தமிழர் விடுதலை கழகம் மாவட்ட செயலாளர் முத்துக்குமார், விடுதலை சிறுத்தைகள் செய்தி தொடர்பாளர் முத்துவளவன், இந்து மக்கள் கட்சி தலைவர் உடையார் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார், உதவி போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரன், நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் மற்றும் போலீசார் மாநகராட்சி வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு மனு கொடுக்க 10 பேர் மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு மனு வாங்க யாரும் இல்லாததால், அவர்கள் தரையில் அமர்ந்து திடீரென கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி துணை ஆணையாளர் தாணுமூர்த்தி வந்து அவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்களை கொடுக்க சென்றவர்கள் மாநகராட்சி அலுவலகத்தின் உள்ளே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட 37 பேரை போலீசார் கைது செய்து ஒரு மண்டபத்தில் அடைத்தனர். அப்போது அவர்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராகவும், போலீசாருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள். இந்த முற்றுகை போராட்டத்தையொட்டி நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

1 More update

Next Story