கிராம மக்கள் தர்ணா போராட்டம்


கிராம மக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 13 Nov 2022 6:45 PM GMT (Updated: 13 Nov 2022 6:45 PM GMT)

கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே செட்டிகுறிச்சி பஞ்சாயத்தை சேர்ந்த தெற்கு கோனார் கோட்டை கிராமத்தில் ஊருக்கு கிழக்கே தனியார் கல்குவாரி ஒன்று புதியதாக அமைய உள்ளது. இந்தக் குவாரியால் விளைநிலங்கள் பாதிப்பு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் எனக்கூறி பல்வேறு அதிகாரிகளுக்கு கிராம மக்கள் மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி நேற்று கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு அந்த கிராமத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஏராளமானோர் திரண்டு வந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்ததும் தாசில்தார் சுப்புலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். போராட்ட குழுவினரான ஊர் நாட்டாமை சீனிவாசன், தர்மகர்த்தா கருப்பசாமி, சங்கர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து தங்கள் கிராமப் பகுதியில் கல்குவாரி அமையக்கூடாது என்றனர். அதற்கு தாசில்தார், சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு காணப்படும் என்றார். இதையடுத்து அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story