ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்


ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2023 1:00 AM IST (Updated: 22 Jun 2023 3:50 PM IST)
t-max-icont-min-icon

ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துடன் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

சேலம்

ஆத்தூர்:-

மகனுக்கு கட்டாய காதல் திருமணம் செய்து வைத்ததாக கூறி, ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துடன் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சமூக வலைதள காதல்

சேலம் மாவட்டம், ஆத்தூர் ெரயில் நிலையம் அருகே உள்ள சக்தி நகர் பகுதியில் வசிப்பவர் ரவி. இவர் ஓய்வுபெற்ற போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். இவருடைய மகன் விக்னேஷ் (வயது 23). இவர் கடந்த 2021-ம் ஆண்டு கோவையில் தங்கி எம்.பி.ஏ. படித்து வந்தார்.

சென்னை தரமணியை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகள் தீபிகா (23) சென்னையில் பி.காம் படித்து வந்தார். இவருக்கும், விக்னேசுக்கும் 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.

காதலரை தேடி...

இதன் தொடர்ச்சியாக அவர்கள் இருவரும் மேற்படிப்புக்காக திருச்சியில் ஒரே வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் விக்னேஷ் திருச்சிக்கு செல்லவில்லை. ேமலும் மாணவி தீபிகாவுடன் ெசல்போனிலும் தொடர்பு கொண்டு பேசவில்லை. இதையடுத்து தனது காதலரை தேடி தீபிகா சேலத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் வந்தார்.

அங்கு அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவை சந்தித்து, நான் விக்னேஷ் என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என புகார் மனு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

திருமணம்

அதன்பேரில் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் இருவீட்டாரையும் அழைத்து பேசிய நிலையில் விக்னேஷ், தீபிகாவை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு ஒரு மாத காலம் விக்னேஷ் சென்னை தரமணியில் மாமனார் வீட்டில் தங்கி இருந்தார். பின்னர் ஆத்தூருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வந்த விக்னேஷ் மீண்டும் மனைவியை பார்க்க செல்லவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மீண்டும் ஏமாற்றம் அடைந்த தீபிகா தனது உறவினர்களுடன் ஆத்தூர் சக்தி நகரில் உள்ள ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ரவியின் வீட்டிற்கு சென்று தனது கணவரை சேர்த்து வைக்க வேண்டும் என நேற்று காலை போராட்டம் நடத்தினார். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, தனது மனைவி ஜூலி, மகன் விக்னேஷ் ஆகியோருடன் வீட்டை பூட்டிவிட்டு ஆத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

தர்ணா போராட்டம்

அங்கு அவர் தனது மகனுக்கு இஷ்டம் இல்லாமல் கட்டாய திருமணம் செய்து வைத்து விட்டீர்கள், எனது மகன் வாழ்க்கையே பாழாய் போய்விட்டது எனக்கூறி மகளிர் போலீஸ் நிலையம் முன்பு ஒரு போர்டில் எழுதி வைத்துவிட்டு தனது மனைவி, மகனுடன் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ரவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் ஆத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விரைந்து வந்து ரவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லும் படியும், இது தொடர்பாக முறையாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுங்கள் அல்லது கோர்ட்டு மூலம் தீர்வு காணுங்கள், இங்கு போராட்டம் நடத்தாமல் கலைந்து செல்லுங்கள் எனக்கூறினார். இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த திடீர் போராட்டத்தால் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய வளாகத்தில் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

போலீசில் புகார்

அதே நேரத்தில் ரவியின் வீட்டு முன்பு போராட்டம் நடத்திய தீபிகாவை ஆத்தூர் நகர் போலீசார் அழைத்து சட்டப்படி கோர்ட்டு மூலம் தீர்வு காணுங்கள் என்று அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனிடையே தீபிகா அடியாட்களுடன் வந்து வீட்டில் இருந்த தனது மகள் சங்கீதாவை தாக்கி விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று ஆத்தூர் நகர் போலீசில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ரவி புகார் கொடுத்துள்ளார். அதன்பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story