பருவமழை கைகொடுத்ததா? கைவிட்டதா?


பருவமழை கைகொடுத்ததா? கைவிட்டதா?
x

கரூர் மாவட்ட விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, வெற்றிலை, கோரைப்புல், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவைகளை அதிகளவில் சாகுபடி செய்து வருகிறார்கள்.

கரூர்

பருவ மழை

பெரும்பாலான விவசாயிகள் காவிரி மற்றும் கிளை வாய்க்கால்களையும், வறண்ட பகுதி விவசாயிகள் வடகிழக்கு பருவமழை மற்றும் கிணறு மூலம் பாசனம் செய்து வருகிறார்கள். பருவம் தவறாமல் பெய்யும் மழையே விவசாயத்தில் நல்ல விளைச்சலை தேடி தரும். ஆனால் சமீப காலமாக உலக வெப்பமயமாதல் மற்றும் பல்வேறு காரணங்களால் சரியான நேரத்தில் பருவ மழை பெய்யாததும், அப்படியே பெய்தாலும் போதுமான அளவு பெய்யாமலும் அல்லது தேவையற்ற நேரத்தில் மழைப்பொழிவு ஏற்பட்டும் விவசாயிகளின் உழைப்பை வீணடிக்கிறது.

இருப்பினும் விவசாயிகள் உழவுத்தொழிலை தொடர்ந்து மேற்கொண்டுதான் வருகின்றனர். இந்தநிலையில் சமீபத்தில் கடந்து சென்ற பருவமழை காலத்தில் போதிய மழை பெய்ததா? அல்லது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்ததா? என்பது குறித்து கரூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் கூறியதாவது:-

பஞ்சப்பட்டி ஏரி

பிள்ளபாளையத்தை சேர்ந்த ராஜா:- கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் பருவமழை அதிகளவு பெய்து பல ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஆண்டு ஓரளவு தான் மழை பெய்தது. இதனால் பல ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கிறது. பஞ்சப்பட்டி ஏரியில் மிகவும் குறைவான அளவே தண்ணீர் உள்ளது. இந்த ஏரிக்கு தண்ணீர் வந்தால் 2,000 ஏக்கர் அளவில் விவசாயம் நடைபெறும். ஆனால் பருவமழை போதிய அளவு பெய்யாததால் தண்ணீர் வரத்து இல்லை. எனவே மாயனூர் காவிரியில் இருந்து பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதேபோல் காவிரியில் இருந்து வீரராக்கியம், கோவக்குளம் ஏரிக்கும் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில் வெள்ளக்காலங்களில் உபரியாக செல்லும் தண்ணீரை கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்பினால் விவசாயத்துக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அதிக மழை பெய்துள்ளது

நொய்யல் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி:- கடந்த ஆண்டு பருவமழை அதிகளவில் பெய்துள்ளது. இதனால் நாங்கள் பயிரிட்டிருந்த நெற்பயிர் நன்கு செழித்து வளர்ந்தது. நெல் விளைச்சலும் நன்றாக இருந்தது. அதேபோல் தொடர் மழையின் காரணமாக தண்ணீர் பஞ்சம் ஏற்படவில்லை. வயல்களுக்கு அதிகளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை. ஆனால் நெல் விளைச்சல் அதிகமாக இருந்தும் விலை குறைவாக இருந்ததால் எங்களுக்கு கட்டுப்படியாகவில்லை. இருப்பினும் அதிக மழை பெய்ததால் எங்களை போன்ற விவசாயிகளுக்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்தநிலையில் வரும் காலங்களில் விவசாயிகள் விளைவித்த விளைபொருட்களுக்கு விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் வகையில் மத்திய, மாநில அரசுகள் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

பயிர்கள் அழுகும் நிலை

முத்தனூர் பகுதியை சேர்ந்த ஜெகநாதன்:- கடந்த ஆண்டு பருவமழை விவசாயிகளுக்கு தேவையான அளவு பெய்தது. அதேபோல் எதிர்பாராத அளவுக்கு மழையின் தாக்கம் இருந்தது. இதனால் இப்பகுதிகளில் அதிகளவில் நெல் விளைச்சல் இருந்தது. மேலும் கரும்பு, வாழை, வெற்றிலை உள்ளிட்ட பயிர்களும் நன்கு செழித்து வளர்ந்தன. தொடர் மழையின் காரணமாக பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டோம். நல்ல விளைச்சல் இருந்தது. இருப்பினும் விளைவித்த விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.

மகசூல் குறைவு

தோகைமலை அருகே உள்ள மாகாளிபட்டியை சேர்ந்த துரைகண்ணு:- கடந்த ஆண்டு தோகைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து அனைத்து ஏரி, குளங்களும் நிறைந்து பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயம் செழிப்புடன் இருந்தது. இந்தாண்டு போதிய அளவில் மழை பெய்யவில்லை. சென்ற ஆண்டு பெய்த மழையின் மூலம் இந்தாண்டு குறுகிய அளவு விவசாயம் செய்து உள்ளோம். தற்போது போதிய அளவு மழை பெய்திருந்தால் நீர்மட்டம் உயர்ந்து இருக்கும். தற்போது நீர்மட்டத்தின் அளவு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 500 மூட்டை நெல் மகசூல் கிடைத்த இடத்தில் தற்போது 350 மூட்டைகள் மட்டுமே கிடைத்துள்ளது. இதுபோன்று கிராமங்களில் மழையளவு குறைந்து கொண்டே இருந்தால் விவசாய நிலங்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு கட்டிடங்களாக மாறிவிடும்.

11 சதவீதம் மழை

கரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன்:- கரூர் மாவட்டத்திற்கு சராசரி மழையளவு 652.20 மில்லி மீட்டர் ஆகும். கடந்த 2022-ம் ஆண்டு கரூர் மாவட்டத்தில் சராசரியாக 723.32 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 11 சதவீதம் கூடுதல் ஆகும். கடந்த 2021-ம் ஆண்டு 915.94 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதற்கு காரணம் ஜனவரி மாதத்தில் மட்டும் 115.13 மில்லி மீட்டர் மழை பெய்ததாகும்.

கரூர் மாவட்டத்தை பொருத்தவரை மழையினால் பாதிக்கப்படும் நெல் மற்றும் வாழைக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்தாண்டு பருவமழை சரியான காலங்களில் பெய்ததால் 34 எக்டேர் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு ஒரு எக்டேருக்கு ரூ.13 ஆயிரம் இழப்பீடு தொகையாக கொடுத்துள்ளது.

ஆனால் கடந்த 2021-ம் ஆண்டு பருவமழை காலம் கடந்து நெல் அறுவடை சமயத்தில் அதிக மழை பெய்தது. இதனால் 3 ஆயிரம் எக்டேர் அளவிற்கு நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.

நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது

கரூர் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அன்புமணி:- கரூர் மாவட்டத்தில் 833 குளம் மற்றும் ஊரணிகள் உள்ளன. மேலும் 107 சிறு பாசன குளங்கள் உள்ளன. இதில் 1,000 ஏக்கருக்கு மேல் உள்ள பெரிய குளங்களை பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்கள் தான் இதை பராமரிக்கிறார்கள். 1,000 ஏக்கருக்கு குறைவாக உள்ள சிறு குளங்களை அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. கடவூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் 278 குளம் மற்றும் ஊரணிகள் உள்ளன. குளித்தலையில் 35 மட்டுமே உள்ளன.

கடந்த ஆண்டு பெய்த மழையில் க.பரமத்தி ஊராட்சிக்குட்பட்ட 6 குளங்கள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டின. ேதாகைமலை பகுதியில் உள்ள ஒரு குளம் 75 சதவீதம் நிரம்பியது. 18 குளங்கள் 50 சதவீதம் நிரம்பின. மீதமுள்ள 808 குளங்கள் 25 சதவீதத்துக்கு குறைவாகவே நீர் நிரம்பியது. கரூர் மாவட்டத்தில் உள்ள 107 சிறுபாசன குளங்களில் அதிகபட்சமாக தோகைமலையில் 47 குளங்கள் உள்ளன. அனைத்து சிறுபாசன குளங்களுமே 25 சதவீதத்திற்கு குறைவாகவே நிரம்பின. குளங்களின் மத்தியில் சிறிய அளவிலான குளங்களை வெட்டுவதால் நீர்நிலைகள் தேக்கி வைக்கப்படுகின்றன. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. கிணறு மற்றும் போர்களில் நீர்நிலைகள் உயர்கிறது இதனால் குடிநீர் பிரச்சினை இல்லை. சுற்றுவட்டார பகுதியில் சிறிய விவசாயமும் நடைபெறுகிறது. கடந்த காலத்தில் குளங்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டதால் அனைத்து குளங்களிலும் அதிக கொள்ளளவு தண்ணீர் நிரம்புகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story