கியாஸ் அடுப்பில் சமையல் செய்தபோது பரிதாபம்: சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு


கியாஸ் அடுப்பில் சமையல் செய்தபோது பரிதாபம்:  சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:17:14+05:30)
நாமக்கல்

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அருகே கியாஸ் அடுப்பில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து தீக்காயம் அடைந்த மூதாட்டி இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மூதாட்டி

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் அளவாய்ப்பட்டி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 75). கூலித்தொழிலாளி. இவர் கடந்த மாதம் 10-ந் தேதி வீட்டில் உள்ள கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அடுப்பில் சாதம் வெந்து கொண்டிருந்த நிலையில் வீட்டிற்கு வெளியே சென்று விட்டு மீண்டும் சமையல் அறைக்கு வந்தார். அப்போது சாதம் வடிந்து கியாஸ் பர்னர் மீது விழுந்து அடுப்பு அணைந்தது. ஆனால் சிலிண்டர் அணையாமல் கியாஸ் கசிவு ஏற்பட்டது.

விசாரணை

இதை அறியாத பழனியம்மாள் மீண்டும் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பழனியம்மாளின் சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த பழனியம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பழனியம்மாளின் மகன் முருகன் வெண்ணந்தூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story