கிருஷ்ணாபுரம் அருகேதீக்காயம் அடைந்த இளம்பெண் சாவு
கிருஷ்ணாபுரம் அருகே தீக்காயம் அடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தீக்காயம்
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள சீராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளிரத்தினம் (வயது 27). தொழிலாளி. இவருடைய மனைவி ரம்யா (21). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. ரம்யாவுக்கும், அவருடைய மாமியாருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரம்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காளிரத்தினம் மனைவியின் உடலில் பிடித்த தீயை அணைக்க முயன்றார். அப்போது 2 பேருக்கும் உடலில் தீக்காயம் ஏற்பட்டது.
2 பேர் உயிரிழப்பு
இதையடுத்து உறவினர்கள் 2 பேரையும் மீட்டு புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்ககாக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளிரத்தினம் நேற்று முன்தினம் உயிரிழந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ரம்யா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
குடும்ப பிரச்சினையில் தீக்குளித்த மனைவி மற்றும் அவரை காப்பாற்ற சென்ற கணவர் 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.