நாமக்கல் கமலாலய குளத்தில்மீன்பிடிக்க நீந்தி சென்ற பெயிண்டர் சேற்றில் சிக்கி சாவுதீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர்


நாமக்கல் கமலாலய குளத்தில்மீன்பிடிக்க நீந்தி சென்ற பெயிண்டர் சேற்றில் சிக்கி சாவுதீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர்
x
தினத்தந்தி 12 March 2023 12:30 AM IST (Updated: 12 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் கமலாலய குளத்தில் மீன் பிடிக்க நீந்தி சென்ற பெயிண்டர் சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

பெயிண்டர்

நாமக்கல் அருகே உள்ள எம்.ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 28). பெயிண்டர். இவர் நேற்று மதியம் 2 மணி அளவில் நாமக்கல் கமலாலய குளத்தில் மீன் பிடித்து கொண்டு இருந்தார்.

அப்போது தன்னுடன் மீன் பிடித்து கொண்டு இருந்த சக நபர்களிடம் தான் குளத்தின் நடுவே சென்று மீன் பிடிக்கிறேன் என்று கூறினார். அதற்கு உடன் இருந்தவர்கள் உன்னால் முடியுமா? என கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு அவர் நான் சென்னையில் கடலிலேயே நீந்தி உள்ளேன் என கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் அவர் திடீரென கமலாலய குளத்தில் குதித்து சிறிது தூரம் நீந்தி சென்றவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக நபர்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

சேற்றில் சிக்கி சாவு

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று குளத்தில் மூழ்கிய கார்த்திகை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர தேடலுக்கு பின்னர் கார்த்திக் பிணமாக மீட்கப்பட்டார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மீன்பிடிக்க ஆழமான பகுதிக்கு சென்ற கார்த்திக் சேற்றில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்து இருப்பது தெரியவந்துள்ளது. தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story