நல்லம்பள்ளி அருகேகரும்புசாறு பிழியும் எந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் சாவு
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே கரும்புசாறு பிழியும் எந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் இறந்தார்.
பழக்கடை
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சவுளூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவருடைய மனைவி அனிதா (வயது 35). இவர்கள் கெங்கலாபுரம்- ஏலகிரி பிரிவு சாலை பகுதியில் பழக்கடையுடன் எந்திரம் மூலம் கரும்பு சாறு பிழியும் கடையும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கடைக்கு வந்த ஒருவருக்கு எந்திரம் மூலம் கரும்பு சாறு பிழிந்து கொடுக்கும் பணியில் அனிதா ஈடுபட்டார். அப்போது எந்திரத்தில் கரும்பை பிழிந்தபோது, அனிதா அணிந்திருந்த துப்பட்டா எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் சிக்கியது. அப்போது துப்பட்டா கழுத்தை இறுக்கியதில் அனிதா மயங்கி கீழே விழுந்தார்.
விசாரணை
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அனிதாவை மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அனிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.