காரிமங்கலம் அருகேயானை தாக்கி விவசாயி பலி


காரிமங்கலம் அருகேயானை தாக்கி விவசாயி பலி
x
தினத்தந்தி 27 April 2023 7:00 PM GMT (Updated: 27 April 2023 7:00 PM GMT)
தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி பலியானார்.

விவசாயி

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே முக்குளம் பெரிய மொரசுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேடி (வயது 55). விவசாயி. இவருடைய மனைவி குந்தியம்மாள். இவர்களுக்கு வெங்கடாசலம், வேட்ராய் என்ற 2 மகன்களும், விஜி என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் வேடி நேற்று அதிகாலை வீட்டின் அருகே உள்ள மாந்தோப்புக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது காட்டு யானை ஒன்று அவரை பின்தொடர்ந்து வந்தது. இதனை கவனித்த அவர் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த யானை வேடியை விடாமல் துரத்தி தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இதுதொடர்பாக காரிமங்கலம் போலீசார் மற்றும் பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேடியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விரட்ட வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் தண்ணீர் தேடி யானைகள் கிராம பகுதிக்கு வருகின்றன. எனவே பாலக்கோடு, காரிமங்கலம், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story