கடத்தூர் அருகேராகி அறுவடை எந்திரத்தில் சிக்கி பள்ளி மாணவி பலி
மொரப்பூர்:
கடத்தூர் அருகே ராகி அறுவடை எந்திரத்தில் தலை சிக்கி பள்ளி மாணவி பலியானார்.
பள்ளி மாணவி
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே வேப்பிலைப்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய விவசாய தோட்டத்தில் ராகி அறுவடை செய்யப்பட்டு எந்திரம் மூலம் பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த பணியில் சக்திவேலின் சகோதரி மகள் சுபா (வயது 13) என்பவரும் ஈடுபட்டு இருந்தார். இவர் கேத்துரெட்டிப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் சுபாவின் தலை பகுதி சிக்கி கொண்டது.
விசாரணை
இதில் அவருக்கு தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கடத்தூர் போலீசார் சுபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக சிறுமியின் தந்தை கோவிந்தசாமி அளித்த புகாரின்பேரில் கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.