உடல் நலக்குறைவால் இறந்தார்: தாயின் உடலை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்கிய மகள்கள்


உடல் நலக்குறைவால் இறந்தார்: தாயின் உடலை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்கிய மகள்கள்
x

உடல் நலக்குறைவால் இறந்த தங்கள் தாயின் உடலை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்கி அவரது கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை

திருவொற்றியூர் ராமானுஜம் நகர் ஒத்தவாடை பகுதியைச் சேர்ந்தவர் மீனா (வயது 53). அச்சகத்தொழில் நடத்தி வந்த இவருடைய கணவர் முருகானந்தம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு காயத்ரி, சுவாதி என 2 மகள்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

கடந்த ஒரு சில ஆண்டுகளாக மீனா, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவரது சிறுநீரகம் செயல் இழந்துவிட்டது. மீனா சமூக சிந்தனையும், பல்வேறு முற்போக்கு கருத்துகளையும் கொண்டிருந்தவர்.

எனவே தனது மரணத்துக்கு பிறகு தனது உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது. பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் தனது உடலை பயன்படுத்த வேண்டும் என தனது மகள்களிடம் உறுதிமொழி வாங்கி இருந்தார்.

இந்த நிலையில் சிறுநீரக பிரச்சினையால் இறுதி கட்டத்தில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் உடல் மிக மோசமாக பாதிக்கப்பட்டபோது தனது மகள்களிடம் கடைசி ஆசையாக தனது உடல் உறுப்புகளை பொதுமக்கள் அல்லது மருத்துவ கல்லூரிகள் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில் மீனா, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது கடைசி ஆசைப்படி அவரது மகள்கள் தங்கள் தாயின் உடலை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்கினர். தாயின் ஆசையை நிறைவேற்றிய மகள்களின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.


Next Story