மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள்


மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

ஆதார் கார்டு என்பது நாட்டு மக்களின் அடையாளமாக மட்டுமின்றி அரசு திட்டங்கள், மானியங்களில் முறைகேடுகளை தடுக்கும் ஆயுதமாகவும் மாறி இருக்கிறது.

சமையல் கியாஸ் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமானவுடன் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.

இணைப்பது கட்டாயம்

தற்போது வங்கிக் கணக்கு எண், வருமான வரிக் கணக்கு எண், வருங்கால வைப்பு நிதி எண், வாக்காளர் அடையாள அட்டை எண் வரிசையில், தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணுடனும் ஆதாரை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி இனி மின்சார கட்டணம் செலுத்துகிறவர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஆதார் எண்ணை இணையத்தளத்தின் வழியாக இணைப்பது அவசியமாகிறது.

ஏற்கனவே 100 யூனிட் இலவச மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு கடந்த 15-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

இதுபற்றி மக்கள் கருத்தை அறிய முயன்றபோது பெரும்பாலானோர் 'அப்படியா? எங்களுக்கு ஒன்றும் தெரியாதே...யாரும் சொல்லலேயே..!' என்று அப்பாவித்தனமாகக் கேட்டனர்.

அமைச்சர் விளக்கம்

தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் www.tnebltd.gov.in/adharupload இணைய வழி மூலம் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின்சார கட்டணத்தைக் கட்ட முடியும் என்று கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண் இணைப்பு 100 யூனிட் இலவச மின்சாரத்தை பறிக்கும் முயற்சியா? என்று வீட்டு வாடகைத்தாரர்களின் மத்தியில் அச்சம் எழுந்த வேளையில், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, ' ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தாலும் கூட ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானியம் மின்சாரம் தொடரும். ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று பரப்பப்படுவது வெறும் வதந்தி' என்று விளக்கம் அளித்தார்.

எனினும் மக்கள் மத்தியில் குழப்பமும், அச்சமும் தொடர்ந்து வரும் வேளையில், 'ஆன்லைன்' மூலம் ஆதார் எண்ணை இணைப்பதிலும் அவ்வப்போது தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டு மின்நுகர்வோர்களை பரிதவிக்கவிட்டு வருகிறது.

தடை செய்யக்கூடாது

இது குறித்து மக்கள் வெளிப்படுத்திய கருத்துகள் வருமாறு:-

விருதுநகர் புத்தக வியாபாரி புது ராஜபாண்டியன்:-

தமிழக மின்வாரியம் வீடு, விசைத்தறி, கைத்தறி, விவசாயம் மற்றும் குடிசை மின் இணைப்பு பெற்றோர் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது, இது வரவேற்கக்கூடியது தான். ஆனால் இந்த தகவல் அனைத்து மக்களுக்கும் சரி வர போய் சேரவில்லை. உடனடியாக ஆதார்எண்ணை இணைக்க வில்லைஎன்றால் மின்கட்டணம் செலுத்தமுடியாது என சொல்வது ஏற்புடையதல்ல. வருமானவரித்துறை பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க ஒரு வருடம் அவகாசம் கொடுத்தது. வருமான வரி கணக்கு வைத்திருப்பவை போன்று பல மடங்கு மின்இணைப்பு பெற்றோர் உள்ள நிலையில் மின்வாரியம் ஆதார் எண்ணை இணைக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டியது அவசியமாகும். குறைந்தபட்சம் 3 மாதமாவது அவகாசம் வழங்க வேண்டும். அதுவரை மின் கட்டணம் செலுத்துவதில் தடை எதுவும் செய்யக்கூடாது.

வத்திராயிருப்பு ஆசிரியை ஜானகி:-

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் பல்வேறு முறைகேடுகள் தடுக்கப்படும். ஒருவரே பல்வேறு தனித்தனி இணைப்பு பெற்று 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுகின்றனர். இதன் மூலம் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஆதார் எண் இணைக்கப்படுவதன் மூலம் இதனை தடுக்கலாம். மேலும் இது மின் நுகர்வோருக்கும் மிகுந்த பாதுகாப்பு அளிப்பதாக உள்ளது. வாடகை வீட்டில் குடியிருக்கும் நபர்கள் ஏதாவது முறைகேடுகளில் ஈடுபடாமல் இருப்பதற்கும், வீட்டின் உரிமையாளர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

தேவையில்லாத ஒன்று

திருச்சுழியை சேர்ந்த ஆசிரியர் கதிரேசன்:-

மின் இணைப்பு வைத்துள்ளவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது சரியல்ல. இது நடுத்தர மக்களை பாதிக்கும் செயல். ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வைத்திருப்பவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதால் வீட்டு உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் பிரச்சினை வரலாம். சில மாதங்களில் வீடு மாற்றம் ஏற்படும் போதும் இதே நிலை நீடிக்கலாம். அதனால் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தேவையில்லாத ஒன்று.

பாளையம்பட்டி மாலதி:-

மின் கட்டண எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மானியமாக வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரத்தை ரத்து செய்வதற்கான திட்டமோ என அச்சமாக உள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் கூறியது போல் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்ய வேண்டும். ஆதார் எண்ணுடன் மின்கட்டண எண் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளும் போது பொதுமக்களுக்கு எந்த சிரமும் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும்.


சிறப்பு மையங்கள் திறப்பு

சிவகாசி பகிர்மான செயற்பொறியாளர் பாவநாசம்:- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க வலியுறுத்தி உள்ளது. அதன்படி மின் நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைத்து வருகிறார்கள். பொதுமக்கள் வசதிக்காக சிவகாசி கோட்டத்தில் 10 மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு மையம் தொடங்கப்பட்டு உரிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் ஆதார் அட்டையுடன் வந்து இணைத்துக்கொள்ளலாம். இந்த வசதி அனைத்து அலுவலக நாட்களிலும், அலுவலக நேரங்களில் செயல்படும். 24-ந்தேதி ஒரு நாள் மட்டும் சிவகாசி கோட்டத்தில் 10 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மையங்கள் மூலம் 831 பேர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். எனவே பொது மக்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.



Next Story