டி.ஐ.ஜி. விஜயகுமார் மரணத்தை அரசியலாக்க வேண்டாம்


டி.ஐ.ஜி. விஜயகுமார் மரணத்தை அரசியலாக்க வேண்டாம்
x
தினத்தந்தி 8 July 2023 12:45 AM IST (Updated: 8 July 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

மன அழுத்தம் காரணமாகவே டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து உள்ளார். இதை அரசியலாக்க வேண்டாம் என்று கோவையில் கூடுதல் டி.ஜி.பி. அருண் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்
மன அழுத்தம் காரணமாகவே டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து உள்ளார். இதை அரசியலாக்க வேண்டாம் என்று கோவையில் கூடுதல் டி.ஜி.பி. அருண் தெரிவித்தார்.


கூடுதல் டி.ஜி.பி. அருண் அஞ்சலி


கோவையில் டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் நேற்று காலை கோவை வந்தார். அவர் கோவை அரசு ஆஸ்பத் திரிக்கு நேரில் சென்று போலீஸ் உயர் அதிகாரிகளிடம் டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலுக்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் அஞ்சலி செலுத்தினார்.


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


கடந்த 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்த விஜயகுமார் மிகவும் திறமையான அதிகாரி. அவர் முன்னதாக 6 ஆண்டுகள் தமிழக காவல்துறையில் டி.எஸ்.பி.யாக பணியாற்றினார். எனக்கு தனிப்பட்ட முறையில் அவரை நன்றாக தெரியும். அவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம் அர்ப்பணிப்புடன் தனது பணியை செய்து வந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.


அரசியலாக்க வேண்டாம்


அவரது தற்கொலை தொடர்பாக நடத்திய விசாரணையில், அவர் கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்து உள்ளார். இதற்காக தொடர்ந்து டாக்டரிடம் சிகிச்சையும் பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் அவர் இருந்ததாக தெரிகிறது. இதை அறிந்ததும் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து கோவைக்கு வந்து தங்கி உள்ளனர்.


அவரிடம் ஐ.ஜி. உள்பட உயர் அதிகாரிகளும் பேசி அவரை மன அழுத்தத்தில் இருந்து மீட்க அறிவுரை வழங்கினர். ஆனாலும் அவர் துப்பாக்கியால் சுட்டு திடீரென தற்கொலை செய்து விட்டார். அதற்கு பணிச்சுமையோ, குடும்ப பிரச்சினையோ காரணம் இல்லை. மன அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே அவருடைய மரணத்தை அரசியலாக்க வேண்டாம்.


மனஅழுத்த நோய்


குடும்ப சுமையோ, பணிச்சுமையோ எதுவும் அவருக்கு கிடையாது. 2 மற்றும் 3 நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததால் அவரை ஐ.ஜி. சுதாகர், போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் சந்தித்து ஆறுதல் கூறி தேற்ற முயன்று உள்ளனர்.


அவருக்கு மன அழுத்த நோய் இருப்பது குறித்து எங்களுக்கு முன்கூட்டியே எதுவும் தெரியாது. தற்போது டாக்டர்களிடம் விசாரணை நடத்திய பிறகுதான் இது குறித்து தெரியவந்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இவ்வாறு அவர் கூறினார்.


Next Story