அமராவதி ஆற்றில் அனுமதியின்றி தோண்டப்பட்ட கிணறு


அமராவதி ஆற்றில் அனுமதியின்றி தோண்டப்பட்ட கிணறு
x

அனுமதியில்லாமல் கிணறு தோண்டப்பட்டு தண்ணீரை வெளியே கொண்டு செல்ல முயற்சி

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளம் அருகே உரிய அனுமதியில்லாமல் கிணறு தோண்டப்பட்டு தண்ணீரை வெளியே கொண்டு செல்ல முயற்சி செய்வதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விளைநிலங்கள்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு அமராவதி ஆறு கைகொடுக்கும் நீராதாராமாக இருந்து வருகிறது. ஆற்றின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பயனடைந்து வருகின்றன. இந்தநிலையில் அமராவதி ஆறு மற்றும் ஆற்றை ஒட்டிய பகுதிகளில் கிணறு தோண்டி நீரை உறிஞ்சும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இந்தநிலையில் கடத்தூர் பகுதியில் அமராவதி ஆற்றில் தற்போது புதிதாக கிணறு ஒன்று தோண்டப்பட்டுள்ளது. இந்த கிணற்றை தோண்டுவதற்கு வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட எந்த துறைகளிலும் அனுமதி பெறப்படவில்லை என்பது தெரிய வருகிறது.மேலும் இந்த கிணற்றிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு ஊராட்சி பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டதாகவும் தெரிய வருகிறது. அவர்கள் மாவட்ட எல்லைக்குள் கிணறு தோண்டுவதற்குப் பதிலாக எல்லை தாண்டி இங்கே தோண்டப்பட்டுள்ளது.சில நாட்கள் இடைவெளிக்குள் தோண்டப்பட்டுள்ள இந்த திடீர் கிணறால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.ஏற்கனவே இந்த பகுதிக்கு அருகில் சில இடங்களில் அனுமதியில்லாமல் கிணறு தோண்டப்பட்டுள்ளது.

நடவடிக்கை

எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து அமராவதி ஆற்றில் அனுமதியில்லாமல் கிணறு தோண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் அமராவதி ஆற்றிலிருந்து முறைகேடாக தண்ணீர் உறிஞ்சப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

-


Next Story