மழை வெள்ள சேதங்களை தடுக்க கால்வாய்களை தூர்வாரும் பணி மும்முரம்


மழை வெள்ள சேதங்களை தடுக்க கால்வாய்களை தூர்வாரும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 6 July 2023 2:00 AM IST (Updated: 6 July 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பகுதியில் மழை வெள்ள சேதங்களை தடுக்க கால்வாய்களை தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் மழை வெள்ள சேதங்களை தடுக்க கால்வாய்களை தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வெள்ளப்பெருக்கு

பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் வெளியேறும் கழிவுநீர் சாக்கடை கால்வாய் வழியாக ஜமீன்ஊத்துக்குளியில் உள்ள கிருஷ்ணா குளத்திற்கு செல்கிறது. இந்த கால்வாயில் பருவமழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், கால்வாயையொட்டி உள்ள வீடுகளுக்குள் கழிவுநீருடன் மழைநீர் புகுந்து விடுகிறது. இந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது.

தூர்வாரும் பணி

இந்த நிலையில் வெள்ள சேதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி நடராஜ் மணியகாரர் காலனி பகுதியில் நேற்று தொடங்கியது. இந்த பணிகளை நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் மழை காலத்தில் கழிவுநீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் கால்வாயை முழுமையாக தூர்வார வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

நடவடிக்கை

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி நகரில் சேகரமாகும் கழிவுநீர் சாக்கடை, கால்வாய் மூலம் கிருஷ்ணா குளத்திற்கு செல்கிறது. மரப்பேட்டை முதல் கண்ணப்ப நகர் வரை கால்வாய் 5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. தற்போது தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளதால் வெள்ளப்பெருக்கை தடுக்க கால்வாய் தூர்வாரும் பணி தொடங்கி உள்ளது.

இந்த பணிகளை ஒரு வார காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story