மதுரை மத்திய சிறையில் வீடியோ, ஆடியோவுடன் டிஜிட்டல் நூலக திட்டம் -தமிழகத்தில் முதல் முறையாக அமைப்பு


மதுரை மத்திய சிறையில் வீடியோ, ஆடியோவுடன் டிஜிட்டல் நூலக திட்டம் -தமிழகத்தில் முதல் முறையாக அமைப்பு
x

மதுரை மத்திய சிறையில் வீடியோ, ஆடியோவுடன் கூடிய டிஜிட்டல் நூலகத்திடம் உருவாக்கப்பட்டது. தென் தமிழகத்தில் முதல் முறையாக இங்கு அமைக்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி.பழனி தெரிவித்துள்ளார்.

மதுரை


மதுரை மத்திய சிறையில் வீடியோ, ஆடியோவுடன் கூடிய டிஜிட்டல் நூலகத்திடம் உருவாக்கப்பட்டது. தென் தமிழகத்தில் முதல் முறையாக இங்கு அமைக்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி.பழனி தெரிவித்துள்ளார்.

சிறை நூலகத் திட்டம்

தமிழக சிறைத்துறை டி.ஜி.பி.யாக அம்ரேஷ் பூஜாரி பொறுப்பேற்ற பின் கைதிகளின் நலன் சிறை காவலர் நலன் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தி வருகிறார். மேலும் கைதிகளுக்கான நவீன நேர்காணல் அறை, கைதிகளின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் விதமாகவும், அவர்களுக்கு விழிப்புணர்வு, தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் பங்களிப்புடன் சிறை நூலகத்திட்டம் போன்றவற்றை கொண்டு வந்தார். அதன்படி, மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கான பெரிய அளவிலான நூலகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நூலகத்திற்கு சுமார் 1 லட்சம் புத்தகங்களை தனிநபர், அமைப்புகள் மூலம் நன்கொடையாக பெறுவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறை டி.ஐ.ஜி. பழனி, சூப்பிரண்டு வசந்தகண்ணன் மற்றும் சிறைத்துறையினர் முயற்சியில் இலக்கியம், கவிதை, நாவல், புராணம் போன்ற பல்வேறு புத்தகங்கள் நன்கொடையாக பெறப்பட்டு வருகிறது.

டிஜிட்டல் நூலக திட்டம்

இந்த நிலையில் மதுரை கூடல்நகரை சேர்ந்த 92 வயது முதியவர் பாலகிருஷ்ணன் என்பவர் 300-க்கும் மேற்பட்ட புத்தகங்களை இலவசமாக வழங்கியுள்ளார். வழக்கறிஞர்கள், அமைப்பினர், தனி நபர்கள் என, தங்களால் முயன்றளவு புத்தகங்களை தொடர்ந்து வழங்குகின்றனர். ஈரோடு பகுதியை சேர்ந்த இலஞ்சி சமூக நல அமைப்பைச் சேர்ந்த ஜானகி என்பவர் நேற்று சுமார் 1000 புத்தகங்களை சிறை நூலகத்திற்கு வழங்கினார். இதுவரை சுமார் 12 ஆயிரத்திற்கும் மேலான புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

நூலக திட்டத்தை தொடர்ந்து அடுத்தக் கட்டமாக கைதிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் புத்தக வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை மத்திய சிறையில் கேபிள் வழியாக ஆடியோ, வீடியோவுடன் ஒளிபரப்பும் டிஜிட்டல் நூலகத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு புத்தகங்களின் கதைகளை முழுமையாக விளக்கும் விதத்தில் ஒளி, ஒலி காட்சியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைதிகள் அவரவர் அறையில் இருந்தபடியே வீடியோ, ஆடியோ வாயிலாக ஒரு புத்தகம் பற்றிய முழு விளக்கத்தை கதை வடிவிலும், வாசிப்பு நிலையிலும் ஒரே நேரத்தில் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டி.வி. மூலம் பார்க்க ஏற்பாடு

இதுகுறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி.பழனி கூறும் போது,

சிறை நூலகத்தைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக ஒரே நேரத்தில் ஒரு புத்தகம் பற்றி அனைத்து கைதிகளும் தெரிந்து கொள்ளும் வகையில் ஒலி, ஒளி வடிவில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடைமுறையிலுள்ள 52 டி.வி.க்கள் (ஆண்கள் பிரிவு), பெண்கள் சிறையிலுள்ள 4 டி.வி.க்கள் மூலம் பார்க்க கேட்க முடியும். நேரத்தை பொறுத்து தினமும் காலை 6.30 முதல் 8 மணி வரையிலும், மதியம் 12 முதல் 1.30 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை இதனை காணலாம்.

மேலும், காலை நேரத்தில் இலக்கிய வாதிகள், ஆன்மிகவாதிகள், தன்னம்பிக்கை பேச்சாளர்கள், சொற்பொழிவாளர்களின் உரைகளும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளோம். நூலகத்திட்டம் மூலம் கைதிகள் விரும்பும் புத்தகங்கள் அவரவர் அறைக்கே கொண்டு சென்று வழங்கிறோம். இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள கிளைச் சிறை மற்றும் மாவட்ட சிறைகளில் சென்று புத்தகங்களை வழங்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story