சிதிலமடைந்த கோவில்களை புனரமைக்க வேண்டும்- ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்
தமிழகத்தில் சிதிலமடைந்த கோவில்களை புனரமைக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.யாக பணியாற்றி ஓய்வுபெற்ற பொன் மாணிக்கவேல் நேற்று நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 38 ஆயிரம் கோவில்கள் உள்ளன. கோவில்களை வருமானத்தின் அடிப்படையில் பிரிப்பது தவறான முன்னுதாரணம் ஆகும். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே நாணல்காடு திருகண்டீஸ்வரர் கோவில் மிகவும் சிதிலமடைந்து உள்ளது. சுற்றுச்சுவர் இடிந்து அந்தரத்தில் தொங்குவதால், கோவில் மூடப்பட்டு உள்ளது. பாண்டியர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த இந்த கோவிலை உடனடியாக சீரமைக்க வேண்டும். இதேபோன்று தமிழகம் முழுவதும் சிதிலமடைந்த கோவில்களை புனரமைக்க வேண்டும்.
கோவில்களில் பூஜை நடத்தும் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் சம்பளம் வழங்குகின்றனர். அதிலும் பாக்கி வைத்திருப்பதாக கூறுகின்றனர். கோவில் அர்ச்சகர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். கோவில்களை வரலாற்று பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும்.
பழங்காலத்தில் ஆண்ட தமிழ் பேரரசர்களால் கோவில்கள் கட்டப்பட்டன. அந்த கோவில்களை இறை நம்பிக்கை உள்ளவர்கள் காக்க வேண்டும். கோவில்களை பாதுகாக்கும் சட்டங்கள் வலிமையாக இல்லை. தமிழகத்தில் 165 தொன்மையான கோவில்கள் உள்ளன. அங்கிருந்த பெரும்பாலான சிலைகள் தற்போது இல்லை. அருங்காட்சியகத்தில் இருக்கும் சிலைகளை கோவில்களுக்கு திருப்பி வழங்க வேண்டும்.
கிராம கோவில்கள் புனரமைப்புக்காக பழனி கோவிலில் இருந்து ரூ.2 கோடியை 1,250 கோவில்களுக்கு ஒதுக்கீடு செய்து உள்ளனர். அந்த கோவில்களின் விவரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பட்டியல் சமுதாய பகுதி கிராம கோவில்களுக்கு ரூ.25 கோடி செலவிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அதுபற்றிய விவரத்தையும் தெரிவிக்க வேண்டும்.
கடந்த 2018-ம் ஆண்டு ரூ.350 கோடியில் கோவில்களில் சிலை பாதுகாப்பு மையம் கட்டுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒரு கோவிலில் மட்டுமே சிலை பாதுகாப்பு மையத்தை கட்டி முடித்து உள்ளனர். அதுவும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அந்த கோவிலிலும் நான் கூறிய பாதுகாப்பு அம்சங்களுடன் பாதுகாப்பு மையத்தை கட்டவில்லை.
உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரையிலும் சிலை பாதுகாப்பு மையம் அமைக்கும் பணிகள் முழுமை பெறவில்லை. பந்தநல்லூர் கோவிலில் திருமேனி பாதுகாப்பு மையம் மட்டும் கட்டப்பட்டு உள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்ட கோவில்களில் சிலை பாதுகாப்பு மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.