கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம், அலகு குத்தி, அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

புதுக்கோட்டை

முத்துமாரியம்மன் கோவில்

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. பூச்சொரிதல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு ெசலுத்தி நேர்த்திக்கடன் ெசலுத்தினர்.

இதைதொடர்ந்து நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தீமிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. கோவில் முன்பு 13 அக்னி குண்டங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

நேர்த்திக்கடன் செலுத்தினர்

இதில் கொன்னையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்தும், அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பொன்னமராவதி போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல் ரகுமான், இன்ஸ்பெக்டர் தனபாலன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.


Next Story