''தினத்தந்தி கல்வி கண்காட்சியால் குழப்பம் நீங்கி தெளிவு பிறந்தது'' - மாணவ-மாணவிகள் கருத்து


தினத்தந்தி கல்வி கண்காட்சியால் குழப்பம் நீங்கி தெளிவு பிறந்தது - மாணவ-மாணவிகள் கருத்து
x

மகாலட்சுமி

‘‘தினத்தந்தி கல்வி கண்காட்சியால் மேல்படிப்பு என்ன படிக்கலாம்? என்ற குழப்பம் நீங்கி தெளிவு பிறந்தது’’ என்று மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

திருநெல்வேலி

நெல்லை நூற்றாண்டு மண்டபத்தில் நேற்று தொடங்கிய 'தினத்தந்தி'- எஸ்.ஆர்.எம். இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சிக்கு வந்திருந்த மாணவ-மாணவிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

மேல்படிப்பு தேர்வு செய்ய...

நெல்லை துறையூரைச் சேர்ந்த மாணவர் யுவராஜ்:- நான் பிளஸ்-2 முடித்துள்ளேன். மேல்படிப்பு என்ன படிக்கலாம்?, அதற்கு எந்த கல்வி நிறுவனங்களை தேர்வு செய்யலாம்? என்பது குறித்து தெரிந்து கொள்வதற்காக இந்த கண்காட்சிக்கு வந்தேன். இங்குள்ள அரங்குகளில் இருப்பவர்கள், மேல்படிப்பிற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை விளக்கி கூறினார்கள். இதன் மூலம் மேல்படிப்பு என்ன படிக்கலாம்? என்பதை தெளிவாக அறிந்து கொண்டேன். கடல்சார் ஆராய்ச்சி படிக்க திட்டமிட்டு உள்ளேன்.

குழப்பம் நீங்கியது

தென்காசியைச்் சேர்ந்த மாணவர் மாதேஷ்:- நான் பிளஸ்-2 படித்துள்ளேன். மேல்படிப்பு என்ன படிக்கலாம்? என்று குழப்பத்தோடு இந்த கண்காட்சிக்கு வந்தேன். இங்குள்ள பல்வேறு அரங்குகளில் உள்ள கல்வியாளர்கள் சொன்ன தகவலை கேட்டு எனது குழப்பம் நீங்கி தெளிவு பிறந்தது. மருத்துவம் மேல்படிப்பு படிக்க முடிவு செய்துள்ளேன். இதற்காக நீட் தேர்வு பயிற்சி வகுப்பிற்கு செல்ல உள்ளேன். இந்த கண்காட்சி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

மேல்படிப்புக்கு உறுதுணை

வீரவநல்லூரைச் சேர்ந்த மாணவி மகாலட்சுமி:- நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளேன். இங்கு மருத்துவம் எப்படி படிக்க வேண்டும்?, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மருத்துவம் படிப்பதற்கான வழிமுறைகள், தகுதிகள் குறித்து விளக்கி கூறினார்கள். இதன் மூலம் எனது குழப்பங்கள் அனைத்தும் நீங்கியது. இந்த கண்காட்சி எனது மேல்படிப்புக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. இதேபோன்று அனைத்து மாணவர்களும் உயர்கல்விக்கான பயனுள்ள தகவல்களை ஒரே இடத்தில் பெற முடிந்தது.

பாடப்பிரிவுகள்

நெல்லை துறையூரைச் சேர்ந்த அருளானந்தம்:- இந்த கண்காட்சிக்கு எனது மகனை அழைத்து வந்தேன். பல்கலைக்கழகங்கள், என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்வேறு கல்லூரிகள் கற்று கொடுக்கும் பாடங்களில் எத்தனை வகையான பாடப்பிரிவுகள் உள்ளது? என்பதை தெரிந்து கொண்டேன். கண்காட்சியில் தெரிவிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த கண்காட்சிக்கு அழைத்து வந்தால், அவர்களை மேல்படிப்பு படிக்க வைப்பதில் எந்த குழப்பமும் ஏற்படாது. எனது மகன் கடல் சார்ந்த படிப்பு படிப்பதற்கு திட்டமிட்டு உள்ளான்.


Next Story