தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

குண்டும், குழியுமான சாலை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், தெரணிகிராமம் வடக்குத்தெருவில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தெரணிகிராமம்.

பராமரிக்கப்படாத சிறுவர் பூங்கா

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சிறுவர் விளையாட்டு பூங்கா பராமரிப்பு இல்லாமல் விளையாட்டு உபகரணங்கள் பெரும்பாலும். உடைந்துள்ளது. இதனால் பூங்காவிற்கு வரும் குழந்தைகள் பெருத்த ஏமாற்றத்துடன் செல்கின்றனர். விரைவில் மாவட்ட நிர்வாகம் சிறுவர் பூங்காவை சீரமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், கைகளத்தூரில் இருந்து பணி நிமித்தமாகவும், பள்ளி, கல்லூரிகளுக்கும் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் மாவட்ட தலைநகரான பெரம்பலூருக்கு சென்று வருகின்றனர். காலை 8 மணிக்கு பிறகு அடுத்த பஸ் 9.45 மணிக்கு தான். இதன் காரணமாக தினமும் ஒரே பஸ்சில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் மிகவும் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். ஆகவே

இவ்வழியில் இயங்கி வந்த கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட 2 பஸ்களையும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கைகளத்தூர்.

குடிநீர் இன்றி மக்கள் அவதி

பெரம்பலூர் மாவட்டம், கைகளத்தூரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கைகளத்தூர்.

சுகாதார சீர்கேடு

பெரம்பலூர் மாவட்டம், கிழுமத்தூர் கிராமத்தில் பெரும்பாலானோர் திறந்தவெளியிலேயே இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். குறிப்பாக பட்டிசாலையில் அதிகளவு கழிப்பிடமாகவும், குப்பைகொட்டும் இடமாகவும் பயன்படுத்துகிறார்கள். இந்த சாலை வழியாகத்தான் இப்பகுதியில் உள்ள அங்கன்வாடிக்கு குழந்தைகள் சென்று வருகின்றனர். இதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கிழுத்தூர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிக்குளம் கிராமத்தில் இருக்கும் குன்னுமேடு தெரு சாலை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலையாக இருந்தது. இந்த நிலையில் தற்போது இப்பகுதி மக்களின் ஆக்கிரமிப்பால் தார்சாலை மறைந்து ஓடையாக காட்சி அளிக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், செட்டிக்குளம்.


Next Story