தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 July 2022 1:01 AM IST (Updated: 25 July 2022 1:04 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

வேகத்தடை அமைக்கப்படுமா?

திருச்சி மாவட்டம், வயலூர் சாலை உய்யகொண்டான் திருமலை மெயின் ரோடு சண்முகா நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து மேற்கு பகுதி சண்முகா நகர் பஸ் நிறுத்தம் வரை சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இந்த சாலை ஓரம் கோவில்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் ஆகியவை உள்ளன. பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ள இந்த சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதினால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து முக்கியமான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சண்முகா நகர்.

அம்மாமண்டப படித்துறையில் பக்தர்களுக்கு அனுமதி உண்டா?

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் உள்ள காவிரிக்கரையோர அம்மாமண்டபம் படித்துறை தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும், பக்தர்களும் புனித நீராட வந்து செல்லக்கூடிய இடமாகும். இவ்விடத்தில் வருகிற ஆடி அமாவாசை அன்று இன்னும் கூடுதலான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம், பரிகாரம் போன்றவை செய்வதற்கு வருவார்கள். தற்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் மேற்கண்ட காரியங்கள் செய்வதற்கு அம்மாமண்டபத்தில் அனுமதி உண்டா? இல்லையா என்பதனை மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே அறிவிப்பு செய்தால் அதனை பொதுமக்கள் பின்பற்றுவதற்கு ஏதுவாக இருக்கும். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் முன்அறிவிப்பு வெளியிட வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

பொதுமக்கள், ஸ்ரீரங்கம்.

தெருநாய்களால் தொல்லை

திருச்சி மாநகராட்சி கூனிபஜார், சவேரியார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளை கடிக்க வருவதினால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கூனிபஜார்.

இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டண கழிப்பிடம்

திருச்சி மாவட்டம், ச.கண்ணனூர் பேரூராட்சி அலுவலகம் அருகில் ஆண்கள், பெண்களுக்கென நவீன கட்டண கழிப்பிடம் இருக்கிறது. சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இவ்வழியை கடந்து செல்லும்போது இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக இந்த கட்டண கழிப்பிடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் கட்டிடத்தின் வெளிப்பகுதியில் போடப்பட்டுள்ள தகரம் சிதிலமடைந்து, கட்டிடத்தின் உள்பகுதியில் மேலே உள்ள சிமெண்டு பெயர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டின் போது இந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சமயபுரம்,

ஆபத்தான மின்கம்பங்கள்

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் காமுதோட்டத்தெரு சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலக வாசல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் இதே பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் வாசலில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பமும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அன்பழகன், நரியன்தெரு.


Next Story