தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

இருள் சூழ்ந்த குகை வழிப்பாதை

கரூர் சணப்பிரட்டியில் ரெயில்வே குகை வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த குகை வழிப்பாதையில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் குகை வழிப்பாதையில் இருள் சூழ்ந்து உள்ளதால் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சணப்பிரட்டி.

தூர்வாரப்படாத கழிவுநீர் கால்வாய்கள்

கரூர் மாவட்டம், கோம்புப்பாளையம் பகுதி வழியாக உபரி நீர் கால்வாய் சென்று புகழூர் கால்வாயில் கலக்கிறது. இந்த கால்வாயின் வழியாக ஏராளமான உபரிநீர் செல்கிறது. இந்நிலையில் கால்வாயில் முளைத்துள்ள பல்வேறு வகையான செடி, கொடிகளை அகற்றி பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் ஏராளமான செடி, கொடிகள் முளைத்துள்ளன. இதன் காரணமாக உபரிநீர் கால்வாய் வழியாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே உள்ளாட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயில் முளைத்துள்ள பல்வேறு வகையான செடி, கொடிகளை அகற்றி உபரி நீர் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

சுப்பிரமணி, கோம்புப்பாளையம்,

குறுகிய பாலத்தை அகலப்படுத்த வேண்டும்

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கியில் உள்ள புகழூர் வாய்க்காலின் குறுக்கே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் குறுகிய சிறிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்றும், அவர்களது கால்நடைகளை காவிரி படுகையில் மேய்க்க ஓட்டிச் சென்றும் வருகின்றனர். அதேபோல் விவசாயிகளும் அந்த வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் இடு பொருட்களையும், விலை பொருட்களையும் அந்த வழியாக கொண்டு வர முடியாமல் வெகுதூரம் சென்று வருகின்றனர். எனவே குறுகிய பாலத்தை அகற்றிவிட்டு நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்கு பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சேமங்கி, கரூர்

பாதுகாப்பற்ற தொடக்கப்பள்ளி

கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா, திருக்காடுதுறை அருகே கட்டிப்பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இதுவரை கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தப்பள்ளியில் சமூக விரோதிகளும், பாம்பு மற்றும் விஷப்பூச்சிகளும் இங்கு அதிகமாக நடமாடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. எனவே குழந்தைகளின் நலன் கருதி உடனடியாக இந்த பள்ளிக்கூடத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தமிழரசன், கட்டிப்பாளையம், கரூர்

வேகத்தடை அமைக்கப்படுமா?

கரூர் மாவட்டம், திருமாநிலையூர் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருமாநிலையூர்


Next Story