தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

பழுதடைந்த மின்மாற்றி

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் இந்திரா நகர், கீழத்தெரு சுடுகாட்டுக்கு அருகே உள்ள மின்மாற்றி பழுதடைந்துள்ளதால் அப்பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு இப்பகுதி மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அந்த பழைய மின்மாற்றியை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் புதிய மின்மாற்றியை அமைத்து மக்கள் நலனை காக்க வேண்டும். கடந்த 10 மாதங்களாக மின்வெட்டு காரணமாக இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், இந்திராநகர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகரைகள், நீர்வழிபாதை, வடிகால் வாய்க்கால்கள், சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அரியலூர்.

கறிக்கடைகளுக்கு தனி இடம் அமைக்கப்படுமா?

அரியலூர் டவுனில் உள்ள காந்தி மார்க்கெட் அருகில் தோல் கிடங்கு தெருவில் சாலையோரத்தில் கறிக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அசுத்தமாகி வருகிறது. எனவே கறிக்கடைகள் வைப்பவர்களுக்கு என தனி இடம் ஒதுக்கித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தினேஷ்குமார், அரியலூர்.

போக்குவரத்துக்கு இடையூறு

அரியலூர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள சாலைகள் அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. வணிக நிறுவனத்தினர் தங்கள் பொருட்களை சாலையின் பாதி அளவிற்கு வைத்து விடுகின்றனர். இதனால் பொருட்கள் வாங்க வருபவர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை சாலையின் நடுவே நிறுத்தி விடுவதால் தினசரி காலை 7 மணியில் இருந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் சாலையில் வைக்கப்பட்டுள்ள கடைகளை ஒழுங்குப்படுத்தி வாகனங்கள் நிற்பதற்கு இடம் ஏற்படுத்தி தரவேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அரியலூர்.

கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் வரை 100 அடி சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் நெல்லிதோப்பு கிராமத்தில் மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது பெய்து வரும் மழைநீர் சாலையில் எங்கும் செல்ல முடியாமல் பள்ளத்தில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக இந்த சாலையில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மீன்சுருட்டி, அரியலூர்.
Next Story