தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, பெட்டவாய்த்தலை திருமுருகன் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்பு கூடுபோல் காட்சியளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருமுருகன் நகர்.

கடிக்க வரும் தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம்

திருச்சி உறையூர் முதலியார்தெரு, காமாட்சியம்மன் நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் சாலைகளில் நடந்து செல்லும் முதியவர்கள், பெண்கள், குழந்தைகளை கடிக்க வருவதினால் அவர்கள் பெரிதும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், உறையூர், திருச்சிராப்பள்ளி.

சாலையில் பள்ளம்

திருச்சி 13-வது வார்டு மூக்கப்பிள்ளை சந்து- தனியார் பிசியோ தெரபி முன்புறம் மற்றும் லட்சுமி- மகளிர் விடுதி முன்புறம் நீண்ட பள்ளம் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த இடத்தில் நிலைதடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுவாமிநாதன், திருச்சி.

சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள்

திருச்சி மாவட்டம், துறையூர் ஒன்றியம், மதுராபுரி ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக பொதுமக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ஓட்டல்களில் இருந்து கொட்டப்படும் கழிவுகள், இறைச்சி கழிவுகள் ஆகியவை புறவழிச்சாலை முழுவதும் மலை போல் குவிந்துள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த குப்பைகளை கிடக்கும் உணவுகளை திண்பதற்காக நாய்கள், பன்றிகள் வருவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மதுராபுரி.

விபத்து ஏற்படும் அபாயம்

திருச்சி மன்னார்புரத்தில் இருந்து கே.கே.நகர் நோக்கி செல்லும் சாத்தனூர் சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்பட்டுள்ள பகுதியில் சாலையில் பள்ளமாகவே உள்ளது. இதனால் இரவு நேரத்தில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி சென்று வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மன்னார்புரம்.


Next Story