தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புதிய நீர்த்தேக்க தொட்டி தேவை
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி, கோவக்குளம் 12-வது வார்டுக்கு உட்பட்ட ஊரணி மேட்டில் உள்ள பொதுமக்கள் அன்றாட தண்ணீர் தேவைக்காக பயன்படுத்துகின்ற நீர்த்தேக்க தொட்டி எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. மனுக்கள் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பேரூராட்சி நிர்வாகம், விபத்து ஏற்படுவதற்குள் உடனடியாக அதனை அகற்றிவிட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பார்த்திபன், கோவக்குளம்.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் சாலையில் நடையனூர் பகுதியில் பல்வேறு வகையான கடைகள் உள்ளன. அதேபோல் திருமண மண்டபம் உள்ளது. இங்கு சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுகளை கடைக்காரர்கள் மற்றும் திருமண மண்டபத்தை சேர்ந்தவர்கள் தார் சாலையின் ஓரத்தில் கொட்டி வருகின்றனர். அதேபோல் அப்பகுதியில் உள்ள கடைக்காரர்களும், சாலையோரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள், கப்புகளை கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தமிழரசன், நடையனூர்.
பயனற்ற ஆழ்துளை கிணறு
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள முத்தனூர், சொட்டையூர் பொதுமக்களின் நலன் கருதி முத்தனூர் வெள்ளதாரை பகுதியில் ரூ.3.90 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு ஆழ்துளை கிணற்றுக்குள் மின்மோட்டார் பொருத்தப்பட்டு அருகாமையில் உள்ள மின்கம்பத்தில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு முத்தனூர், சொட்டையூர் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் மின்மோட்டோருக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்ட மின்வயர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டது. அன்று முதல் இன்று வரை மின்வயர் இணைப்பு கொடுக்காமல் அப்படியே பழுதடைந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுப்பிரமணி, முத்தனூர்.
செடி-கொடிகள் முளைத்துள்ள சுடுகாடு
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே நொய்யல் -வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் இருந்து கவுண்டன்புதூர் செல்லும் பிரிவு சாலை அருகே செல்வநகர் பகுதியை சேர்ந்தவர்களின் நலன் கருதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சுடுகாடு கட்டப்பட்டது. இந்த சுடுகாட்டில் அப்பகுதியில் இறந்தவர்களை புதைத்தும், எரித்தும் வந்தனர். இந்நிலையில் பல்வேறு செடி, கொடிகள் முளைத்ததன் காரணமாக இப்பகுதியில் இறந்தவர்களை புதைக்கவும், எரிக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுடுகாட்டில் முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்றி இறந்தவர்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தினேஷ், நொய்யல்.
சிதிலமடைந்த ரெயில்வே மேம்பாலம்
கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் இருந்து மண்மங்கலம் செல்லும் சாலையில் ரெயில்வே பாதையின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் வழியாக ஏராளமான லாரிகள், கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மேம்பாலத்தில் கான்கிரீட்டுகள் சிதிலமடைந்து இருசக்கர வாகனங்கள் நிலை தடுமாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வாங்கல்.